என் மலர்
செய்திகள்

கருப்புப் பண வேட்டை தொடங்கியது: 60 ஆயிரம் பேருக்கு வருமான வரித்துறை நோட்டீசு
புதுடெல்லி,:
கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திடீரென ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து பணப் பரிவர்த்தனைகளுக்கும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
மத்திய அரசின் நடவடிக்கையால் கருப்பு பணம் முடக்கப்பட்டது. பிப்ரவரி 28-ந்தேதி வரை நடத்தப்பட்ட ஆய்வில் கணக்கில் வராத பணம் ரூ.9334 கோடி இருப்பதை வருமான வரித்துறையினர் கண்டு பிடித்தனர்.
இது தொடர்பாக 17.92 லட்சம் பேருக்கு வருமான வரித்துறை நோட்டீசு அனுப்பி விசாரணை நடத்தியது. இவர்களில் 9.46 லட்சம் பேர் முறையாக விளக்கம் அளித்தனர். மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கருப்பு பணத்தை வெளியில் கொண்டு வரும் இரண்டாவது கட்ட நடவடிக்கையை தற்போது வருமான வரித்துறை தொடங்கியுள்ளது. இது தொடர்பாக 60 ஆயிரம் பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இவர்களில் 1,300 பேர் ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்புக்கு பிறகு அதிக அளவில் பண பரிமாற்றம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 6 ஆயிரம் பேர் அதிக அளவில் சொத்துகள் வாங்கியதில் வருமான வரித்துறை விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளனர்.
இவர்கள் உடனே பதில் அளிக்க வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது. அவர்கள் விளக்கம் அளித்த பிறகு நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.