search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை, தானேயில் மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்க அரசு புதிய திட்டம்
    X

    மும்பை, தானேயில் மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்க அரசு புதிய திட்டம்

    மும்பை, தானேயில் மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்க அரசு புதிய திட்டம் வகுத்துள்ளது. அதன்படி நெடுஞ்சாலைகள் மும்பை பெருநகர வளர்ச்சி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளன.
    மும்பை:

    தேசிய, மாநில நெடுஞ்சாலை ஓரம் 500 மீட்டருக்குள் உள்ள மதுக்கடைகளை மூடவேண்டும் என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. டிரைவர்கள் மது குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளை தடுக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவால் மராட்டிய மாநிலத்தில் 15 ஆயிரத்து 699 மதுக்கடைகள், பார், மதுபான விடுதிகள் (பப்), பாருடன் கூடிய ஓட்டல்கள் மூடப்பட்டன. இதனால் மராட்டியத்தில் ஓட்டல் துறை பெரும் பின்னடைவை சந்தித்தது.

    மேலும் மாநில அரசுக்கும் ஆண்டிற்கு ரூ.7 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதனால் மாநில அரசு மிகுந்த நெருக்கடிக்குள்ளானது.

    குறிப்பாக நிதித்தலைநகரான மும்பை நகர்புறங்கள் வழியாக தான் மேற்கு, கிழக்கு விரைவு நெடுஞ்சாலைகள் செல்கின்றன. இந்த சாலையின் இருபுறங்களிலும் 5 நட்சத்திர ஓட்டல்கள், மதுபான விடுதிகள், பார்கள், மதுக்கடைகள் அதிகளவில் உள்ளன. மும்பையில் நெடுஞ்சாலையோர மதுக்கடைகள் நிரந்தரமாக மூடப்பட்டால், அது ஓட்டல் துறை மட்டுமின்றி சுற்றுலா துறையிலும் வெகுவாக பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இந்த விவகாரத்தில் மாற்று வழியில் சுமுகமாக தீர்வு காண மாநில அரசு முடிவு செய்தது.

    இதையடுத்து மாநில கலால்துறை மந்திரி சந்திரசேகர் பவன்குலே, உள்ளாட்சி அமைப்புகள் நெடுஞ்சாலைகளை பராமரிக்கும், சீரமைக்கும் பணியை செய்ய முன்வந்தால் நகர்புறங்களில் உள்ள நெடுஞ்சாலைகளை அப்பட்டியலில் இருந்து நீக்கும் சட்ட திருத்தம் கொண்டு வர தயார் என வெளிப்படையாக அறிவித்தார்.

    இதற்கிடையே மும்பை, தானேயில் உள்ள கிழக்கு, மேற்கு விரைவு நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளை தங்களிடம் ஒப்படைக்க மும்பை பெருநகர வளர்ச்சி குழுமம் (எம்.எம்.ஆர்.டி.ஏ.) மாநில பொதுப்பணித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த தகவலை பொதுப்பணித்துறையில் இருந்து கிடைத்த தகவல்கள் உறுதி செய்துள்ளன.

    மேலும் நெடுஞ்சாலை, விரைவு சாலைகளை பராமரிக்கும் செலவை ஏற்கவும் மும்பை பெருநகர வளர்ச்சி குழுமம் ஒப்புக்கொண்டுள்ளதாக பொதுப்பணித்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

    இது குறித்து மேலும் அவர் கூறும்போது, மதுக்கடைகளை திறக்க வசதியாக பொதுப்பணித்துறையிடம் இருந்து மும்பை பெருநகர வளர்ச்சி குழுமத்திடம் நெடுஞ்சாலைகளை ஒப்படைக்க அரசும் விரும்புகிறது. இதற்கான ஒப்புதல் கிடைத்த பிறகு நகர்புற சாலைகளை நெடுஞ்சாலை பட்டியலில் இருந்து நீக்கும் சட்டத்திருத்தம் செய்வதற்கான அறிவிப்பை பொதுப்பணித்துறை வெளியிடும் என்றார்.

    இதேபோல புனே, நாக்பூர், அவுரங்காபாத், நாசிக் உள்ளிட்ட பல நகர்புறங்களில் உள்ள சாலைகளை நெடுஞ்சாலை பட்டியலில் இருந்து நீக்கும் சட்டத்திருத்தம் விரைவில் கொண்டு வரப்படும் என மாநில அரசு தகவல்கள் கூறுகின்றன. இதையடுத்து விரைவில் மாநிலம் முழுவதும் நகர்புறங்களில் நெடுஞ்சாலையோர மதுக்கடைகள் திறக்கப்படும் என்பது உறுதியாகி உள்ளது.
    Next Story
    ×