search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓட்டுப்பதிவு எந்திரத்தில் தில்லுமுல்லு - ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் முறையீடு
    X

    ஓட்டுப்பதிவு எந்திரத்தில் தில்லுமுல்லு - ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் முறையீடு

    ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை எதிர்க்கட்சி தலைவர்கள் நேற்று சந்தித்து பேசினர். அப்போது ஓட்டுப்பதிவு எந்திர தில்லுமுல்லு குறித்து புகார் மனு அளித்தனர்.
    புதுடெல்லி:

    ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை எதிர்க்கட்சி தலைவர்கள் நேற்று சந்தித்து பேசினர். அப்போது ஓட்டுப்பதிவு எந்திர தில்லுமுல்லு குறித்து புகார் மனு அளித்தனர். இனிமேல் தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்தவேண்டும் என்றும் வற்புறுத்தினர்.

    டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேற்று பிற்பகல் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல்காந்தி தலைமையில், காங்கிரஸ், இடது சாரிகள், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ராஷ்டிரிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் சந்தித்து பேசினர்.

    அப்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றையும் அவர்கள் ஜனாதிபதியிடம் அளித்தனர்.

    இந்த சந்திப்புக்கு பின்னர் ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே மன்மோகன் சிங், சோனியாகாந்தி, ராகுல்காந்தி, குலாம் நபி ஆசாத் ஆகியோர் நிருபர்களை சந்தித்தனர். அப்போது குலாம் நபி ஆசாத் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜனாதிபதியிடம் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல்களில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் நடத்தப்பட்ட தில்லுமுல்லு குறித்து முறையிட்டோம். குறிப்பாக அண்மையில் ஓட்டுப்பதிவில் நடந்த முறைகேடு, (மத்தியபிரதேசத்தில் பிந்த் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் செயல்விளக்கத்தின்போது எந்த பட்டனை அழுத்தினாலும் அது பா.ஜனதாவின் தாமரை சின்னத்தில் பதிவானது தொடர்பான குற்றச்சாட்டு) குறித்து விரிவாக விளக்கினோம்.

    எனவே இனி நடைபெற இருக்கும் இமாசல பிரதேசம், குஜராத் சட்டசபை தேர்தல் உள்ளிட்ட அத்தனை தேர்தல்களையும் வாக்குச் சீட்டு முறை மூலம் நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தோம்.

    இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஏற்கனவே தேர்தல் கமிஷனரை சந்தித்து புகார் கூறின. அவர்களும் இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதாக தெரிவித்து உள்ளனர்.

    பா.ஜனதா ஆட்சி நடைபெறாத மாநிலங்களில் கவர்னர்கள் மூலம் அந்த ஆட்சிகளை சீர்குலைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தவிர அரசியல் நெறிமுறைக்கு மாறாக செயற்கை பெரும்பான்மையை உருவாக்கி குறுக்கு வழியில் ஆட்சியும் அமைக்கப்படுகிறது. இதுபோல்தான் கோவாவிலும், மணிப்பூரிலும் ஆட்சி அமைக்கப்பட்டது என்பதை தெரிவித்தோம்.

    மத்திய முகமைகளான சி.பி.ஐ. வருமானவரி இலாகா, அமலாக்கத்துறை ஆகியவற்றின் மூலம் எதிர்க்கட்சி தலைவர்களையும், குறிப்பாக முதல்-மந்திரிகளையும் மத்திய அரசு தொந்தரவுக்கு உள்ளாக்குவது பற்றியும் எடுத்துக் கூறினோம். இதற்கு முன்பு ஒருபோதும் முதல்-மந்திரிகளும், எதிர்க்கட்சி தலைவர்களும் இதுபோன்ற தொந்தரவுகளை அனுபவித்தது இல்லை.

    டெல்லி மேல்-சபையை ஆளும் பா.ஜனதா குறைத்து மதிப்பிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது பற்றியும் ஜனாதிபதியிடம் விளக்கினோம். அண்மையில், பண மசோதாக்கள் என்ற போர்வையில் பல்வேறு முக்கிய மசோதாக்களை ஆளும் கட்சி நிறைவேற்றிவிட்டது. இது அரசியல் அமைப்பு சட்டத்தை குறைத்து மதிப்பிடும் செயல் ஆகும்.

    தற்போது நாட்டு மக்கள் மத்தியில் ஒருவித பய உணர்வு நிலவுகிறது. மத்திய அரசை எதிர்ப்போரின் குரல் ஒடுக்கப்படுகிறது. தீயசக்திகள் வன்முறையை தூண்டிவிடுகின்றன. மர்மகும்பல் குடி மக்களை கொன்று குவிக்கின்றனர். இந்த நிலை நாடு முழுவதும் காணப்படுவதை ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறினோம்.

    ஜனாதிபதி உடனடியாக இதில் தலையிட்டு நாட்டின் சட்ட விதிகளின்படி இந்தியாவின் அரசியல் அமைப்பு ஜனநாயகத்தையும், குடிமக்களின் அடிப்படை உரிமைகளையும் பாதுகாப்பதை உறுதி செய்யும்படி கேட்டுக் கொண்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் அளித்த புகார் மனுவில், தாரிக் அன்வர்(தேசியவாத காங்கிரஸ்), சதீஷ்சந்திர மிஸ்ரா(பகுஜன் சமாஜ்), தர்மேந்திர யாதவ், நீரஜ் சேகர்(சமாஜ்வாடி), டி.கே.எஸ். இளங்கோவன்(தி.மு.க.), டி.ராஜா(இந்திய கம்யூனிஸ்டு), சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்டு), சரத்யாதவ் (ஐக்கிய ஜனதாதளம்), சுகேந்து சேகர்ராய், கல்யாண் பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்) ஆகியோரும் கையெழுத்திட்டு இருந்தனர். 
    Next Story
    ×