search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பத்திரிகையாளர் அவமதிப்பு: விஜயகாந்த் சார்பில் வருத்தம் தெரிவித்ததால் வழக்குகள் தள்ளுபடி
    X

    பத்திரிகையாளர் அவமதிப்பு: விஜயகாந்த் சார்பில் வருத்தம் தெரிவித்ததால் வழக்குகள் தள்ளுபடி

    சென்னை ரத்ததான முகாமிலும் சேலத்திலும் நடைபெற்ற சம்பவத்திலும் பத்திரிகையாளர்களின் மனம் புண்பட்டிருந்தால், அதற்காக வருத்தம் தெரிவிப்பதாக விஜயகாந்த் கூறிய விளக்கத்தை ஏற்றுக்கொண்ட பிரஸ் கவுன்சில் தலைவர் வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
    புதுடெல்லி:

    சென்னையில் 2 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ரத்த தான முகாமில் கலந்து கொண்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களை நோக்கி காறி உமிழ்ந்து கடுமையான வார்த்தைகளில் பேசியது குறித்தும், கடந்த ஆண்டு சேலத்தில் கேள்வி கேட்ட நிருபர் ஒருவரை தாக்க முயற்சித்தது பற்றியும் தாமாக முன்வந்து வழக்குகள் பதிவு செய்த இந்திய பிரஸ் கவுன்சில், இந்த சம்பவங்கள் குறித்து விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும் இது குறித்து அமர்நாத் கசூரி என்ற பத்திரிகையாளர் தாக்கல் செய்த புகார் மனுவையும் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

    இந்த நிலையில் நேற்று விஜயகாந்த் சார்பில் தே.மு.தி.க.வின் டெல்லி மாநில செயலாளர் வக்கீல் ஜி.எஸ்.மணி இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி சி.கே.பிரசாத் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, பத்திரிகையாளர்கள் மீது விஜயகாந்த் மிகுந்த மரியாதை வைத்து இருப்பதாகவும், சென்னை ரத்ததான முகாமிலும் சேலத்திலும் நடைபெற்ற சம்பவங்களில் பத்திரிகையாளர்களின் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக விஜயகாந்த் வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார். அத்துடன் வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாது என்றும் கூறினார்.

    இந்த விளக்கத்தை பதிவு செய்து ஏற்றுக்கொண்ட பிரஸ் கவுன்சில் தலைவர் சி.கே.பிரசாத், விஜயகாந்த் மீதான இரு வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
    Next Story
    ×