search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய மந்திரி சபை அடுத்த மாதம் மாற்றம்: பிரதமர் மோடி முடிவு
    X

    மத்திய மந்திரி சபை அடுத்த மாதம் மாற்றம்: பிரதமர் மோடி முடிவு

    பாராளுமன்ற கூட்டம் முடிந்ததும் அடுத்த மாதம் மத்திய மந்திரி சபையில் மாற்றம் செய்ய பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
    புதுடெல்லி:

    மத்திய ராணுவ மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கர் சமீபத்தில் கோவா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். இதன் காரணமாக ராணுவ இலாக தற்காலிகமாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே மத்திய மந்திரி சபையில் உள்ள சில அமைச்சர்களின் செயல்பாடுகளில் பிரதமர் நரேந்திர மோடி கடும் அதிருப்தி அடைந்துள்ளார். அவர்களுக்கு கட்சிப் பதவி வழங்க பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷாவுடன் மோடி ஆலோசித்து வருகிறார்.

    கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக அவர் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே அவரையும் மந்திரி பதவியில் இருந்து மாற்றலாமா என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது பாராளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருவதால் மத்திய மந்திரி சபையில் மாற்றம் செய்ய இயலாது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 12-ந்தேதி பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிகிறது. எனவே அதற்கு பிறகு மத்திய மந்திரி சபையில் மாற்றம் செய்ய பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்



    அருண் ஜெட்லி வசம் உள்ள நிதித்துறை, பாதுகாப்புத்துறை இரண்டுமே மிகவும் முக்கியமானது. அதிக பணிச்சுமை கொண்டது. அந்த இரு இலாகாக்களையும் ஒரே நபர் வகிப்பது என்பது மிகுந்த சிரமத்துக்குரியது. எனவே ராணுவ இலாகாவுக்கு உடனே புதிய அமைச்சரை நியமனம் செய்ய வேண்டியது அவசியமாகும்.

    ஆகையால் மத்திய மந்திரி சபை விரைவில் மாற்றி அமைக்கப்பட இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த மாற்றத்தின் போது புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். பா.ஜ.க.வில் நிறைய இளைய எம்.பி.க்கள் உள்ளனர். எனவே அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை பதவியேற்று வருகிற மே மாதத்துடன் மூன்று ஆண்டுகள் நிறைவு பெற உள்ளது. எனவே முக்கிய இலாகாகளுக்கு உரிய நபர்களை தேர்வு செய்து நியமனம் செய்ய வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியுடன் உள்ளார்.



    மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை மத்திய மந்திரி பதவியில் இருந்து விலக்கி விட்டு, அவருக்கு கவர்னர் பதவி கொடுக்கலாமா என்று ஆலோசிக்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் பாராளுமன்றத்தில் சுஷ்மா ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில் சுமார் 15 நிமிடம் நின்றபடி முன்பு போல பேசினார். இதன் மூலம் அவர் தன் உடல்நலம் தகுதியான நிலையில் இருப்பதை உறுதிபடுத்தியுள்ளார். எனவே அவர் மாற்றப்படமாட்டார் என்று கூறப்படுகிறது.

    மத்திய மந்திரிசபை மாற்றத்தின் போது புதுமுகங்களை இணை அமைச்சர்களாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏற்கனவே இணை அமைச்சர்களாக உள்ள மூத்த தலைவர்களுக்கு காபினெட் அந்தஸ்து பதவி வழங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    பிரதமர் மோடியின் இந்த திட்டம் காரணமாக பா.ஜ.க. இளைய எம்.பி.க்கள் மத்தியில் யார்-யாருக்கு மந்திரிகளாகும் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×