என் மலர்

  செய்திகள்

  சசிகலாவுக்கு 4 ஆண்டு தண்டனை உறுதி: சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
  X

  சசிகலாவுக்கு 4 ஆண்டு தண்டனை உறுதி: சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவரும் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்ததுடன், அவர்களுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு தண்டனையையும் உறுதி செய்தது.
  புதுடெல்லி:

  சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவரும் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்ததுடன், அவர்களுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு தண்டனையையும் உறுதி செய்தது.

  வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 64 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது பெங்களூரு தனிக்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

  இந்த வழக்கில் ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், மற்ற மூவருக்கும் தலா ரூ.10 கோடியும் அபராதம் விதித்து தனிக்கோர்ட்டு நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்கா 2014-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கினார். இதைத்தொடர்ந்து நால்வரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

  பின்னர் ஜாமீனில் வெளியே வந்த நான்கு பேரும் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த ஐகோர்ட், கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் தனிக்கோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்ததோடு, நால்வரையும் விடுதலை செய்தது.

  ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசின் சார்பிலும், தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியாக மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

  இந்த மேல்முறையீட்டு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 7-ந் தேதி இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

  தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ந் தேதி மரணம் அடைந்தார். அதன்பின்னர் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.விலும், ஆட்சியிலும் ஏற்பட்ட அதிரடி மாற்றங்கள், தமிழக அரசியலில் கொந்தளிப்பான சூழ்நிலையை உருவாக்கியது.

  இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி பினாகி சந்திரகோஷ் தலைமையிலான அமர்வு கடந்த 6-ந் தேதி அறிவித்தது.

  அதன்படி, நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பு வழங்கியது. காலை 10.35 மணிக்கு நீதிபதிகள் தீர்ப்பை வாசித்தனர். அப்போது, சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் குற்றவாளி என தீர்ப்பளித்ததுடன், தனிக்கோர்ட்டு வழங்கிய 4 ஆண்டு சிறைத்தண்டனையை உறுதி செய்தனர். முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால், அவரது பெயர் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
  Next Story
  ×