search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதியில் பெண் குழந்தை கடத்தல் கடத்தி சென்ற வாலிபர் கேமராவில் பதிவு
    X

    திருப்பதியில் பெண் குழந்தை கடத்தல் கடத்தி சென்ற வாலிபர் கேமராவில் பதிவு

    சாமி தரிசனத்திற்காக பெற்றோர்களுடன் திருப்பதி வந்திருந்த 5 வயது பெண் குழந்தையை கடத்தி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    திருமலை:

    ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் தும்மி செரலா கிராமத்தை சேர்ந்தவர் மகாத்மா. இவர் தனது மனைவி வரலட்சுமி, மகள் நவ்ஸ்ரீ(5) 3 வயது மகன் ஆகியோருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் திருமலைக்கு வந்திருந்தனர்.

    அவர்களுக்கு தங்குவதற்கான அறைகள் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் பக்தர்கள் தங்கும் மண்டபமான மாதவம் கட்டிடத்தில் லாக்கர் ஒன்றில் தங்கள் உடமைகளை வைத்து விட்டு சாமி தரிசனத்திற்காக கோவிலுக்கு சென்றனர்.

    நேற்று காலை சுமார் 6 மணிக்கு ஏழுமலையானை தரிசித்து அவர்கள் மாதவம் கட்டிடத்திற்கு சென்று படுத்து தூங்கினர். காலை 8 மணிக்கு மகாத்மா கண் விழித்து பார்த்த போது, தனது அருகில் தூங்கிக் கொண்டிருந்த மகள் நவ்யஸ்ரீயை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தனது மனைவியுடன் சேர்ந்து அப்பகுதி முழுவதும் தேடி பார்த்தார். நவ்யஸ்ரீ கிடைக்கவில்லை. இதையடுத்து தனது மகளை காணவில்லை என திருப்பதி மலையில் உள்ள 2-வது டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து திருப்பதி மலை முழுவதும் பல இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    மாதவம் கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அடையாளம் தெரியாத வகையில் மர்ம நபர் ஒருவர் தன்னுடைய முகம் மற்றும் குழந்தையின் முகம் ஆகியவற்றை போர்வையால் மூடியபடி காலை 7.40 மணிக்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.

    இதையடுத்து குழந்தை கடத்தப்பட்டது குறித்து தேவஸ்தான உயர் அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். திருப்பதி மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருக்கும் பஸ் நிலையங்கள் ஆகியவற்றிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். வாகனங்களை தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    மேலும் குழந்தையை கண்டு பிடிப்பதற்காக தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.


    Next Story
    ×