search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஞ்சாபில் இன்று பிரதமர் மோடி - ராகுல் போட்டி பிரசாரம்
    X

    பஞ்சாபில் இன்று பிரதமர் மோடி - ராகுல் போட்டி பிரசாரம்

    பிரதமர் மோடியும் ராகுல் காந்தியும் இன்று பஞ்சாபில் போட்டி பிரசாரம் மேற்கொள்கிறார்கள்.
    புதுடெல்லி:

    பிரதமர் மோடியும் ராகுல் காந்தியும் இன்று பஞ்சாபில் போட்டி பிரசாரம் மேற்கொள்கிறார்கள்.

    117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு வருகிற பிப்ரவரி 4-ந்தேதி தேர்தல் நடக்கிறது. அங்கு தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. பிரசாரம் முடிவடைய இன்னும் 1 வாரமே உள்ள நிலையில் தலைவர்கள் முற்றுகையிட்டு ஆதரவு திரட்டுகிறார்கள்.

    ஆளும் அகாலி தளம் - பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவாக முதல்-மந்திரி பிரகாஷ்சிங் பாதல் மற்றும் அகாலி தளம் தலைவர்களும், பா.ஜனதா தலைவர்களும் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி பஞ்சாபில் பிரசாரம் செய்து பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவு திரட்டுகிறார். ஜலந்தரில் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்துக்கு பா.ஜனதா ஏற்பாடு செய்துள்ளது.

    பிற்பகலில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பிரசாரம் செய்கிறார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் பஞ்சாப் செல்கிறார். பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடுகிறார்கள். இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதேபோல் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் இன்று பஞ்சாபில் பிரசாரம் மேற்கொள்கிறார். இன்று முதல் 3 நாட்கள் பஞ்சாபில் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து காங்கிரசுக்கு ஆதரவு திரட்கிறார்.

    இதற்காக அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சண்டிகார் செல்கிறார். காரில் பிரசாரத்தை தொடங்கும் ராகுல்காந்தி தினமும் 3 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.

    3 நாள் பிரசாரத்தின் போது ராகுல்காந்தி காங்கிரசின் முதல்-மந்திரி வேட்பாளரை அறிவிக்கிறார். மாநில காங்கிரஸ் தலைவராக இருக்கும் கேப்டன் அமரிந்தர் சிங் முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார்.

    அவரை முன்னிலைப்படுத்தி ஏற்கனவே காங்கிரஸ் தலைவர்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள். ராகுல்காந்தி முறைப்படி அதிகாரப்பூர்வமாக முதல்-மந்திரி வேட்பாளரை அறிவிக்கிறார்.

    ராகுல்காந்தியைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த சித்து ஆகியோரும் பஞ்சாபில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்கள்.

    பஞ்சாபில் இந்த தேர்தலில் காங்கிரசுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளதால் காங்கிரசார் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

    Next Story
    ×