search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லோக் ஆயுக்தா நீதிபதியாக விஸ்வநாத் ஷெட்டி நியமனம்
    X

    லோக் ஆயுக்தா நீதிபதியாக விஸ்வநாத் ஷெட்டி நியமனம்

    கர்நாடக லோக் ஆயுக்தா புதிய நீதிபதியாக பி.விஸ்வநாத் ஷெட்டியை நியமிக்க கவர்னர் வஜுபாய் வாலா ஒப்புதல் அளித்து உள்ளார்.

    பெங்களூரு:

    கர்நாடக அரசு அதிகாரிகள் ஊழல் புரிந்தால் அது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்துவதற்காகச் செயல்பட்டு வந்த லோக் ஆயுக்தா அமைப்புக்கு கடந்த ஓராண்டாக நீதிபதி இல்லை என்பது சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.

    லோக் ஆயுக்தா அமைப்பை தவறாக பயன்படுத்தி ஊழல் அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்ததாக அப்போதைய லோக் ஆயுக்தா நீதிபதி பாஸ்கர்ராவ் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

    இது குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வரும் நிலையில், 2015, டிசம்பரில் தனது பதவியை பாஸ்கர்ராவ் ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, லோக் ஆயுக்தா நீதிபதி பதவி காலியாக இருந்தது. புதிய நீதிபதியைக் கண்டறிய முதல் -மந்திரி சித்தராமையா தலைமையிலான உயர்நிலைக் குழு இரு முறை மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்தது.

    இந்த நிலையில், முதல் மந்திரி சித்தராமையா தலைமையில் அண்மையில் கூடிய உயர்நிலைக் குழு, கர்நாடக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.விஸ்வநாத் ஷெட்டியை லோக் ஆயுக்தாவின் புதிய நீதிபதியாக நியமிக்க கவர்னருக்கு பரிந்துரைத்தது.

    நில முறைகேடு குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, இந்த பரிந்துரையை ஏற்க மறுத்த கவர்னர் வஜுபாய் வாலா, ஒருசில விளக்கங்களைக் கேட்டு கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

    அதற்கு கர்நாடகம் அரசும் பதில் அளித்திருந்தது. மேலும், முதல் மந்திரி சித்தராமையாவும் கவர்னர் வஜுபாய் வாலாவை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார்.

    இந்த நிலையில், கர்நாடக லோக் ஆயுக்தா புதிய நீதிபதியாக பி.விஸ்வநாத் ஷெட்டியை நியமிக்க கவர்னர் வஜுபாய் வாலா ஒப்புதல் அளித்து உள்ளார். இந்தத் தகவலை முதல் மந்திரி சித்தராமையா உறுதிப்படுத்தினார். கர்நாடக லோக் ஆயுக்தா நீதிபதியாக பி.விஸ்வநாத் ஷெட்டியை நியமித்து அதற்கான அதிகாரப்பூர்வமான உத்தரவை ஓரிரு நாள்களில் கவர்னர் வஜுபாய்வாலா பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


    Next Story
    ×