என் மலர்

  செய்திகள்

  கொடியேறி பாலகிருஷ்ணன்
  X
  கொடியேறி பாலகிருஷ்ணன்

  மா.கம்யூனிஸ்டு தலைவர் கூட்டத்தில் குண்டு வீச்சு: பா.ஜ.க அலுவலகங்கள் மீது சரமாரி தாக்குதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன் பேசிய பொதுக்கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதால் மாநிலத்தின் சில பகுதிகளில் உள்ள பா.ஜ.க கட்சி அலுவலகங்கள் சூறையாடப்பட்டன.
  திருவனந்தபுரம்:

  கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி பொறுப்பேற்ற பின்பு கண்ணூர் மாவட்டத்தில் அரசியல் மோதல்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

  குறிப்பாக இம்மாவட்ட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினருக்கும், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதா தொண்டர்களுக்கும் இடையே அடி-தடி, வெட்டு, குத்து, கொலை சம்பவங்களும் நடந்துள்ளன.

  இதற்கு கண்டனம் தெரிவித்து இங்கு இரு கட்சியினரும் மாறிமாறி போராட்டங்களும், கடை அடைப்புகளும் நடத்தி வருகிறார்கள்.

  இந்த நிலையில் நேற்று மாலை கண்ணூர் மாவட்டம் தலசேரி பகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் பொதுக்கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் கட்சியின் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் பேசுவதாக கூறப்பட்டு இருந்தது. இதற்கு அப்பகுதி ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதா தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று காலை முதலே இது தொடர்பாக அவர்கள் இடையே கடும் வாக்குவாதமும் நடந்து வந்தது.

  இந்நிலையில் கூட்டம் தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு அப்பகுதிக்கு மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதியை நோக்கி வெடிகுண்டு ஒன்றை வீசினார்.

  அந்த குண்டு மேடை அருகே விழுந்து வெடித்து சிதறியது. சத்தம் கேட்டு மார்க்சிஸ்டு தொண்டர்கள் ஓடிவந்தனர். அவர்கள் குண்டு வீசிய நபரை பிடிக்க முயன்றனர். அதற்குள் அவர் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றுவிட்டார்.

  குண்டு வெடித்ததில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர் உடனே அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தலசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  இதற்கிடையே மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டத்தில் குண்டு வீசிய நபர்களை உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

  மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டத்தில் குண்டு வீச்சு சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் கண்ணூரை அடுத்துள்ள நடபுரம் பகுதியில் உள்ள பாரதிய ஜனதா அலுவலகத்திற்கு சில மர்ம நபர்கள் தீவைத்தனர்.

  இது போல வடகரா பகுதியில் உள்ள இன்னொரு பாரதிய ஜனதா அலுவலகமும் சூறையாடப்பட்டது. அங்கு ஒரு கும்பல் புகுந்து பொருட்களை அடித்து உடைத்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.

  இதற்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினரே காரணம் என அப்பகுதி பாரதிய ஜனதா கட்சியினர் குற்றம் சாட்டினர். கட்சி அலுவலகத்தை சேதப்படுத்தியவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

  கண்ணூர் மாவட்டத்தில் மீண்டும் மார்க்சிஸ்டு - பாரதிய ஜனதா கட்சியினர் இடையே மோதல் மூண்டுள்ளது அப்பகுதி மக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  Next Story
  ×