என் மலர்

  செய்திகள்

  சரக்கு, சேவை வரி கவுன்சில் கூட்டத்தில் வரி விதிப்பு அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதில் உடன்பாடு
  X

  சரக்கு, சேவை வரி கவுன்சில் கூட்டத்தில் வரி விதிப்பு அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதில் உடன்பாடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வரி விதிப்பு அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதில் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே நேற்று உடன்பாடு ஏற்பட்டது.
  புதுடெல்லி:

  வரி விதிப்பு அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதில் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே நேற்று உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து சரக்கு, சேவை வரி விதிப்பு முறை ஜூலை 1-ந்தேதி முதல் நடை முறைக்கு வருகிறது.

  நாடு முழுவதும் ஒரே விதமான மறைமுக வரியாக ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரிமுறையை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

  இதற்காக சரக்கு, சேவை வரி கவுன்சில் அமைக்கப்பட்டு புதிய வரிவிதிப்பு நிர்ணயம் பற்றி மாநில அரசுகளுடன் மத்திய அரசு விவாதித்தும் வருகிறது. இது தொடர்பாக 9-வது முறையாக மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் மாநில நிதி மந்திரிகள் கலந்து கொண்டனர்.

  கூட்டத்தில் ஆண்டுக்கு ரூ.1½ கோடிக்கு கீழாக வருவாய் ஈட்டக் கூடிய சிறிய ரக வர்த்தகங்கள் மீதான சிறப்பு கட்டுப்பாட்டு உரிமையை தங்களுக்கு அளிக்கவேண்டும் என்று பல மாநிலங்கள் மீண்டும் வற்புறுத்தின. ஜி.எஸ்.டி. கவுன்சிலின் தொடர்ச்சியான 5 கூட்டங்களிலும் மாநில அரசுகள் இந்த கோரிக்கையை வைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

  சேவை வரி செலுத்துகிறவர்களுக்கு எளிதாக இருக்கிற விதமாக ஒற்றை பதிவு முறையை கொண்டு வர விரும்பியதால் மத்திய அரசு முந்தைய கூட்டங்களில் இதை ஏற்றுக் கொள்ளாமல் மறுத்து வந்தது. ஆனால் நேற்றைய கூட்டத்தில் இதில் மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே ஒருமனதாக உடன்பாடு ஏற்பட்டது.

  இதுபற்றி மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி நிருபர்களிடம் கூறியதாவது:-

  ஆண்டுக்கு ரூ.1½ கோடிக்கு கீழாக வருவாய் ஈட்டக் கூடிய சிறிய ரக வர்த்தகங்கள் மீதான 90 சதவீத வரி கட்டுப்பாடு மற்றும் மதிப்பீடு செய்யும் உரிமையை மாநிலங்களின் வசம் ஒப்படைப்பது எனவும் மீதமுள்ள 10 சதவீதம் மத்திய அரசிடம் இருக்கும் எனவும் உடன்பாடு எட்டப்பட்டு இருக்கிறது.

  அதேநேரம் ரூ.1½ கோடிக்கு அதிகமாக வருவாய் ஈட்டக் கூடிய பெரிய ரக வர்த்தகங்கள் மீதான வரி கட்டுப்பாடு மற்றும் நிர்வகித்தல் ஆகியவை மத்திய அரசுக்கும் மற்றும் மாநில அரசுகளுக்கும் தலா 50-க்கு 50 சதவீதம் என்ற அளவில் சரிசமமாக அமையும்.

  அரசியல் சாசனப்படி கடல் நீர் எல்லைக்குரிய அதிகாரம் மத்திய அரசிடம் இருந்தாலும், 12 நாட்டில்கல் மைல் கடல் நீர் எல்லை வரையிலான பொருளாதார நடவடிக்கைகளுக்கு கூடுதல் வரியை விதித்துக் கொள்ளும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு அளித்திடவும் இந்த கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டது.

  மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு மற்றும் சேவை நகர்வைப் பொறுத்தவரை, கூடுதல் வரி மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு சேவை வரி விதிப்பு, வசூலிப்பதற்கான அதிகாரம் மத்திய அரசின் வசம் உள்ளபோதிலும் சிறப்பு ஒதுக்கீடு சட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கும் சில இனங்களில் அதிகாரம் இருக்கும்.

  ஏப்ரல் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக இருந்த சரக்கு, சேவை வரி விதிப்பு முறை, வருகிற ஜூலை 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும்.

  இவ்வாறு அவர் கூறி னார்.

  “கூட்டத்தில் சுமுக உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து அடுத்த மாதம்(பிப்ரவரி) 18-ந்தேதி மீண்டும் சரக்கு சேவை வரி கவுன்சில் கூடி உற்பத்தி வரி, சேவை வரி மற்றும் வாட் வரி ஆகியவற்றில் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. சட்டம் மற்றும் அது தொடர்பான சட்ட முன் வடிவிற்கு ஒப்புதல் பெறப்படும். ஒவ்வொரு மதிப்பீட்டையும் ஒரே ஒரு அதிகார அமைப்பு மட்டுமே மதிப்பீடு செய்யும்” என்றும் அருண்ஜெட்லி குறிப்பிட்டார்.

  கூட்டத்தில் கலந்து கொண்ட மேற்கு வங்காள நிதி மந்திரி அமித் மித்ரா, ரூ.1½ கோடிக்கும் குறைவான வருவாய் ஈட்டக் கூடிய சிறு வர்த்தகங்கள் மீதான வரி விதிப்பு அதிகாரம் முழுவதும் மாநிலங்களின் வசமே இருக்கவேண்டும் என்று வற்புறுத்தினார்.

  எனினும், “90 சதவீத மதிப்பீட்டை மாநில அரசுகள் செய்து கொள்ளலாம் என்பது சிறுவணிகர்களை பாதுகாப்பதற்கு கிடைத்த வெற்றி ஆகும்” என்று அவர் தெரிவித்தார். 
  Next Story
  ×