search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஷீனா போரா கொலை: குற்றவாளி இந்திராணிக்கு 12 மணிநேர பரோல்
    X

    ஷீனா போரா கொலை: குற்றவாளி இந்திராணிக்கு 12 மணிநேர பரோல்

    ஷீனா போரா கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி தனது தந்தையின் மறைவையொட்டிய ஈமச்சடங்கில் கலந்துகொள்ள இன்று 12 மணிநேர பரோலில் விடுவிக்கப்பட்டார்.
    மும்பை:

    பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவியான இந்திராணி(43) பெற்ற மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கடந்த 25-8-2015 கைது செய்யப்பட்டார்.

    மும்பையில் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்திராணி ஏற்கனவே நடந்த இரு திருமணங்கள் மற்றும் முன்னாள் கணவர்கள் மூலம் பிறந்த 3 பிள்ளைகள் பற்றிய விவரத்தையும் மறைத்து பீட்டர் முகர்ஜியை மூன்றாவதாக மணந்ததாக கூறப்படுகிறது.

    பீட்டர் முகர்ஜிக்கு அவருடைய முன்னாள் மனைவி மூலம் பிறந்த மகன் ராகுலை ஷீனா போரா முறைதவறி காதலித்ததால் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.

    இவ்வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷீனா போராவின் தாயார் தன்னை ஜாமினில் விடுதலை செய்யுமாறு பலமுறை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுக்கள் அத்தனையும் தள்ளுபடி செய்யப்பட்டன.

    இதற்கிடையில், அசாம் மாநில தலைநகரான கவுகாத்தியில் வசித்துவந்த இந்திராணியின் தந்தை உபேந்திரா போரா உடல்நலக்குறைவால் கடந்த 15-ம் தேதி காலமானார். அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக தன்னை இடைக்கால ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என இந்திராணி சார்பில் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    உபேந்திரா போராவின் இறுதிச்சடங்கில் பங்கேற்க அவரை அனுமதிக்க கூடாது என்று இந்திராணியின் மகனான மிக்காயில் சி.பி.ஐ.க்கு இ-மெயில் மூலம் ஒரு கோரிக்கையை முன்வைத்திருந்தார். இந்த இ-மெயில் நகலை கோர்ட்டில் சமர்ப்பித்த சி.பி.ஐ. தரப்பு வக்கீல் இந்திராணியை பரோலில் விடுவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதையேற்று, இந்திராணியின் இடைக்கால ஜாமின் மனுவை மும்பை கோர்ட் நிராகரித்து விட்டது.

    அவரது ஈமச்சடங்கில் கலந்துகொள்ளவாவது அனுமதிக்குமாறு மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட மனுவையேற்று, 27-ம் தேதி (இன்று) காலை 7 மணியில் இருந்து மாலை 7 மணிவரை 12 மணிநேரம் பரோலில் விடுவிக்க கடந்த 22-ம் தேதி நீதிபதி ஒப்புதல் அளித்தார். ஆனால், பத்திரிகையாளர்களுக்கு பேட்டி எதுவும் அளிக்க கூடாது என்றும் நிபந்தனை விதித்தார்.

    இதையடுத்து, பைக்குல்லா சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இந்திராணி முகர்ஜி இன்று காலை சுமார் 7.30 மணியளவில் சிறையில் இருந்து உரிய போலீஸ் காவலுடன் வெளியே அழைத்து வரப்பட்டார்.

    மும்பை, முலுந்த் பகுதியில் உள்ள பிராமண சேவாசங்கத்தில் உள்ள காரிய மண்டபம், மற்றும் மும்பையில் உள்ள வீட்டில் நடைபெறும் ஈமச்சடங்குகளில் பங்கேற்ற பின்னர், இன்று மாலை 7 மணிக்குள் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார்.
    Next Story
    ×