search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நேபாளத்திற்கு கடத்த முயன்ற ரூ. 32 கோடி புதிய நோட்டுக்கள், 6 கிலோ தங்கம் பறிமுதல்
    X

    நேபாளத்திற்கு கடத்த முயன்ற ரூ. 32 கோடி புதிய நோட்டுக்கள், 6 கிலோ தங்கம் பறிமுதல்

    பீகார் வழியாக நேபாளத்திற்கு லாரி மூலம் கடத்த முயன்ற 32 கோடி ரூபாய் புதிய நோட்டுகள் மற்றும் 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    இந்தியாவில் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். அவர் அறிவித்ததில் இருந்தே வருமானத்திற்கு அதிகமான பணத்தை மறைத்து வைத்திருப்போர் விதிமுறைக்கு மாறாக கோடிக்கணக்கில் மாற்றி வருகின்றனர். அதிலும் சிலர் கோடிக்கணக்கில் 2000 ரூபாய் நோட்டுக்களை பதுக்கி வருகின்றனர்.

    இதனால் வருமான வரித்துறையினர் பல இடங்களில் சோதனை நடத்தி கோடிக்கணக்கில் புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    பீகார் மாநிலத்தின் சம்பாரன் மாவட்டத்தின் கிழக்குப் பகுதியின் ரக்சாலில் இந்திய - நேபாளம் எல்லை உள்ளது. இதில் செக்போஸ்ட் ஒன்று உள்ளது. இந்த செக்போஸ்டில் இன்று சுங்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஒரு லாரி பொருட்களை ஏற்றிக்கொண்டு நேபாளத்திற்கு சென்று கொண்டிருந்தது. அதில் நான்கு பேர் இருந்தனர். அதிகாரிகள் அந்த லாரியை மடக்கி சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த லாரியில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதை கண்டுபிடித்தனர்.

    அதில் 32 கோடி ரூபாய் அளவில் புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவற்றுடன் 6 கிலோ தங்கமும் இருந்தது. அதை உடனே போலீசார் பறிமுதல் செய்தனர். லாரியில் இருந்த நான்கு பேரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×