search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாரம் ரூ. 24000 என்ற வரம்பு தளர்வு: பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு நீங்கியது
    X

    வாரம் ரூ. 24000 என்ற வரம்பு தளர்வு: பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு நீங்கியது

    பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதால் இன்று முதல் வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் கூடுதல் பணம் பெற வழி ஏற்பட்டுள்ளது.

    மும்பை:

    ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து வங்கிகளில் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கு மத்திய அரசு உச்சவரம்பை அறிவித்தது.

    அதன்படி ஒரு வாரத்துக்கு வங்கிக் கணக்குகளில் இருந்து வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக ரூ.24 ஆயிரம் வரை எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை பல தடவை பிரித்து எடுக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கை காரணமாக பொதுமக்களில் பலர் தங்கள் கைவசம் உள்ள பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்யத் தயங்கினார்கள்.

    அத்தியாவசிய செலவுகளுக்கு தேவைப்படும் என்று பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை பலரும் இன்னமும் கை இருப்பு வைத்துள்ளனர். இது தொடர்பாக மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தியது.

    பழைய ரூபாய் நோட்டுகளை முழுமையாக திரும்பப் பெற்றால்தான் நாடு முழுவதும் மக்களிடம் பணப் புழக்கத்தை அதிகரிக்க முடியும் என்ற சூழ்நிலை இருப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து பணப் புழக்கத்தை அதிகரிப்பதற்காக, பணம் எடுப்பதற்கான ரூ.24 ஆயிரம் உச்ச வரம்பை விலக்க முடிவு செய்யப்பட்டது.

    அந்த முடிவை ரிசர்வ் வங்கி நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அதன்படி இன்று (29-ந் தேதி செவ்வாய்க்கிழமை) முதல் வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப பணம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கும்படி பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், மண்டல ஊரக வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றுக்கு ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

    பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதால் இன்று முதல் வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் கூடுதல் பணம் பெற வழி ஏற்பட்டுள்ளது. சில வங்கிகளில் இந்த நடைமுறை இன்றே அமலுக்கு வந்தது. வாடிக்கையாளர்கள் கேட்ட கூடுதல் பணத்தை வழங்கினார்கள்.

    ஆனால் பெரும்பாலான வங்கிகளில் இன்று பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பு தளர்வு கடை பிடிக்கப்படவில்லை. ஏற்கனவே பணம் தட்டுப்பாடாக இருப்பதால் இன்றும், குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணம் கொடுக்க இயலாமல் வங்கிகள் திணறியபடி உள்ளன.

    இதுகுறித்து வங்கி மேலாளர் ஒருவர் கூறுகையில், “நாங்கள் கேட்கும் அளவுக்கு பணத்தை ரிசர்வ் வங்கி தருவதில்லை. இதனால் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் சிறிது, சிறிதாகத் தான் பணம் கொடுத்து வருகிறோம்.

    திடீரென அதிக பணம் கொடுக்க சொன்னால் எப்படி கொடுப்பது என்று புரியவில்லை. மேலும் நாளை முதல் மாத சம்பளம் வாங்குபவர்களும் பணம் பெற அதிக அளவில் வங்கிக்கு வருவார்கள். எனவே பணம் வழங்குவதில் சிரமம் ஏற்படும்” என்றார்.

    Next Story
    ×