search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாயிண்ட் ஆப் சேல் கருவிக்கு வரி விலக்கு: மத்திய அரசு நடவடிக்கை
    X

    பாயிண்ட் ஆப் சேல் கருவிக்கு வரி விலக்கு: மத்திய அரசு நடவடிக்கை

    பண பரிவர்த்தனை செய்வதை ஊக்குவிக்கும்வகையில், ‘பாயிண்ட் ஆப் சேல்’ கருவிக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் பண பரிவர்த்தனை செய்வதை ஊக்குவிக்கும்வகையில், ‘பாயிண்ட் ஆப் சேல்’ கருவிக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் அக்கருவியின் விலை குறைய வாய்ப்புள்ளது.

    ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பாலும், புதிய ரூ.2,000 நோட்டுகள் மட்டுமே அதிக அளவில் புழக்கத்துக்கு வந்துள்ளதாலும் நாடு முழுவதும் சில்லரை தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, ஏராளமானோர் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலம் செய்யப்படும் பண பரிவர்த்தனைக்கு மாறி உள்ளனர். அதற்கு ‘பாயிண்ட் ஆப் சேல்’ என்ற கையடக்க எந்திரம் தேவைப்படுகிறது.

    பெரிய கடைகளில் அக்கருவி ஏற்கனவே இருக்கும்நிலையில், சிறு வணிகர்களும் அதை வாங்கி பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால், அந்த கருவியின் தேவை அதிகரித்துள்ளது.

    இதை பயன்படுத்தி, கிரெடிட், டெபிட் கார்டு மூலமான பரிவர்த்தனையை மேலும் ஊக்குவிக்கும் வகையில், ‘பாயிண்ட் ஆப் சேல்’ கருவிக்கு மத்திய அரசு வரி விலக்கு அளித்துள்ளது.

    அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதிவரை, 12.5 சதவீத உற்பத்தி வரியில் இருந்தும், 4 சதவீத சிறப்பு கூடுதல் வரியில் இருந்தும் ‘பாயிண்ட் ஆப் சேல்’ கருவிக்கு விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    இதுதொடர்பான அறிவிக்கையை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, நேற்று பாராளுமன்றத்தில் கடுமையான அமளிக்கு இடையே தாக்கல் செய்தார்.

    அந்த அறிவிக்கையில், பாயிண்ட் ஆப் சேல் கருவி உற்பத்திக்கு தேவையான அனைத்து மூலப் பொருட்களுக்கும், அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதிவரை, உற்பத்தி வரியில் இருந்தும், சுங்க வரியில் இருந்தும் விலக்கு அளிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இந்த வரி விலக்கு காரணமாக, ‘பாயிண்ட் ஆப் சேல்’ கருவியின் விலை 16.5 சதவீதம் குறையும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. 
    Next Story
    ×