search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவேன்: மம்தா பானர்ஜி
    X

    பிரதமர் மோடி வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவேன்: மம்தா பானர்ஜி

    ரூபாய் நோட்டு பிரச்சினை தொடர்பாக பிரதமர் மோடி வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக மம்தா பானர்ஜி அறிவித்து உள்ளார்.
    கொல்கத்தா:

    ரூபாய் நோட்டு பிரச்சினை தொடர்பாக பிரதமர் மோடி வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக மம்தா பானர்ஜி அறிவித்து உள்ளார்.

    புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டதற்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். இந்த பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசிய அவர், டெல்லியில் தர்ணா போராட்டமும் நடத்தினார்.

    இந்த நிலையில், ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் ஒழிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற பேரணியில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்பினார்.

    பேரணியில் அவர் பேசுகையில் கூறியதாவது:-

    அதிக மதிப்பு கொண்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டதால் ஒட்டுமொத்த தேசமும் பாதிக்கப்பட்டு உள்ளது. நாட்டில் அறிவிக்கப்படாத நிதிநெருக்கடி நிலை உருவாக்கப்பட்டு இருக்கிறது. வங்கிகள், ஏ.டி.எம்.களில் பணம் இல்லை. இதனால் ஏற்பட்ட பாதிப்பினால் இதுவரை 80 பேர் உயிர் இழந்து இருக்கிறார்கள். கையில் பணம் இல்லை என்றால் மக்கள் எதை வாங்கி சாப்பிடுவார்கள்? கடன் அட்டைகளையும், செல்போன்களையுமா சாப்பிட முடியும்?

    கிராமப் புறங்களில் வசிக்கும் பெரும்பாலான மக்களுக்கு வங்கி கணக்கு கிடையாது. இப்போதுள்ள சூழ்நிலையை அவர்களால் எப்படி சமாளிக்க முடியும்?

    ஆனால் பிரதமர் மோடி ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறார். நாட்டில் காகித பணம் இல்லாத பொருளாதாரத்தை உருவாக்கப்போவதாக பேசி வருகிறார்.

    தன்னை யாராவது எதிர்த்தால் அவர்களுக்கு எதிராக சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறையை மோடி பயன்படுத்துகிறார். தனக்கு எதிராக குரல் எழுப்புகிறவர்களை ஒடுக்கப்பார்க்கிறார். ஆனால் எனது குரலை அவரால் ஒடுக்க முடியாது.

    ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் மோடி வாபஸ் பெறவேண்டும். அதுவரை நான் ஓயப்போவது இல்லை. இந்த பிரச்சினை தொடர்பாக நான் மீண்டும் டெல்லி சென்று எதிர்ப்பு பேரணி நடத்த இருக்கிறேன். தேவைப்பட்டால் பிரதமர் மோடியின் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவேன். அவர் பதவி விலகும் வரை ஓயமாட்டேன்.

    இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

    ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் ஒழிக்கப்பட்டதற்கு எதிராக நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடத்த இடதுசாரி கட்சிகள் அழைப்பு விடுத்து இருந்ததற்கு மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    போராட்டம் நடத்த வேண்டும் என்று விரும்பினால் வீதிகளில் இறங்கி மோடி அரசுக்கு எதிராக குரல் எழுப்பவேண்டுமே தவிர, அதை விடுத்து முழுஅடைப்பு நடத்துவதால் எந்த பயனும் ஏற்படாது என்றும், பொருளாதாரம்தான் பாதிக்கப்படும் என்றும் அவர் தனது பேச்சின் போது குறிப்பிட்டார். 
    Next Story
    ×