search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவின் முதல் பண பரிமாற்றம் இல்லாத மாநிலமாகும் கோவா
    X

    இந்தியாவின் முதல் பண பரிமாற்றம் இல்லாத மாநிலமாகும் கோவா

    டிஜிட்டல் முறைக்கு முன்னோடியாக வரும் டிசம்பர் 31-ந்தேதி முதல் இந்தியாவின் முதல் பண பரிமாற்றம் இல்லாத மாநிலம் என்ற சிறப்பை கோவா மாநிலம் பெறவுள்ளது.
    கோவா:

    பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு மாற்றம் குறித்த அறிவிப்பிற்கு பின் மின்னணு பண பரிவர்த்தனைகளின் பக்கம் மக்கள் அதிகளவில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் வருகின்ற டிசம்பர் 31-ம்தேதி முதல் இந்தியாவின் முதல்  பண பரிமாற்றம் இல்லாத மாநிலமாக கோவா மாநிலம் மாறவுள்ளது.

    இந்தத் திட்டத்தின் மூலம் காய்கறி, மளிகை பொருட்கள் தொடங்கி ஆப்பிள் ஐ-போன்கள் வரை ரொக்கமில்லாமல் மின்னணு பரிவர்த்தனைகள் மூலம்தான் வாங்க முடியும்.

    இதற்கு மக்கள் ஸ்மார்ட்போன்கள் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக *99# என்ற எண்ணிற்கு போன் செய்து சில வழிமுறைகளைப் பின்பற்றினால், சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக்கணக்கிலிருந்து பணம் எடுத்துக் கொள்ளப்படும்.

    போன் செய்வதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது. மேலும் ஸ்வைப் மெஷின்கள் எதுவும் தேவையில்லை. தற்போது இந்த பணமில்லா பரிவர்த்தனைகளை எப்படி நிகழ்த்துவது? என வியாபாரிகள் மற்றும் சிறு முதலீட்டாளர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நடைமுறையால் பண பரிவர்த்தனைகள் முற்றிலும் தடை செய்யப்படாது. இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து பாதுகாப்பு மந்திரி பாரிக்கர் வங்கி அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் கடந்த சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

    இதுகுறித்து பாரிக்கர் கூறுகையில் "ரொக்கமில்லா பரிவர்த்தனைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தினால் அதனை செயல்படுத்தும் முதல் மாநிலமாக கோவா இருக்கும் என நினைத்தோம். தற்போது அது சாத்தியமாகியுள்ளது. இந்த திட்டம் பிரதமர் நரேந்திர மோடியின் கனவு" என்றார்.

    இந்தத் திட்டம் குறித்து கோவா மாநில தலைமைச்செயலாளர் ஸ்ரீவத்சவா "கோவாவில் 15 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். 17 லட்சம் மொபைல் இணைப்புகள் உள்ளன. 22 லட்சம் வங்கிக்கணக்குகள் இருக்கின்றன. அரசிடம் பதிவு பெற்ற வியாபாரிகள் ஒவ்வொருவருக்கும் வங்கியிடமிருந்து எம்எம்ஐடி கோடு ஒன்று அளிக்கப்படும்.

    மக்கள் பொருட்கள் வாங்கும்போது இந்த எம்.எம்.ஐ.டி கோடைப் பயன்படுத்தி பணம் செலுத்தலாம். கோவா ரொக்கமில்லா மாநிலமாக மாறிட தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. அனைவரிடமும் வங்கிக் கணக்கும் அதில் பணமும் இருந்தால் போதும்" என்றார்.
    Next Story
    ×