search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கணக்கில் வராத வங்கி டெபாசிட்களுக்கு 40 சதவீதம் வரி: சட்டத்திருத்த மசோதா தாக்கல்
    X

    கணக்கில் வராத வங்கி டெபாசிட்களுக்கு 40 சதவீதம் வரி: சட்டத்திருத்த மசோதா தாக்கல்

    500, 1000 ரூபாய் நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கைக்கு கணக்கில் வராத வங்கி டெபாசிட்களுக்கு 30 சதவீதம் வரியுடன் 10 சதவீதம் அபராதம் விதிக்கும் சட்டத்திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
    புதுடெல்லி:

    செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பிறகு, நவம்பர் 10-ந் தேதி முதல் டிசம்பர் 30-ந் தேதிவரை வங்கிகளில் பழைய நோட்டுகளை டெபாசிட் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதில், ரூ.2 லட்சத்துக்கு மேற்பட்ட டெபாசிட்டுகளுக்கு கணக்கு கேட்கப்படும் என்றும், அது திருப்தியாக இல்லாவிட்டால், கருப்பு பணமாக கருதப்பட்டு, வரியுடன் 200 சதவீத அபராதம் விதிக்கப்படும் என்றும் வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்தது.

    இதனால், பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள், அவற்றை வங்கியில் செலுத்த பயந்து, தீவைத்தும், கிழித்தும் அழித்து வருகிறார்கள். ஆகவே, 200 சதவீத அபராதம் விதிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட்டுள்ளது. 200 சதவீத அபராதம் விதிப்பதற்கு சட்ட அங்கீகாரம் கிடைக்காது என்பதும் இதற்கு ஒரு காரணம்.

    அதே சமயத்தில், செல்லாத நோட்டுகள் அனைத்தும் வீணடிக்கப்படாமல் வங்கியில் செலுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. அதில், கணக்கில் காட்டப்படாத பணத்துக்கு வரி விதித்து தண்டிக்காவிட்டால், செல்லாத நோட்டு அறிவிப்புக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும் என்றும் கருதுகிறது.

    அதற்கு நியாயமான அளவுக்கு வரி விதிப்பதே சரியானது என்ற முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. உள்நாட்டில் உள்ள கருப்பு பணத்தை தாங்களாக தெரிவிப்பதற்கு கடந்த செப்டம்பர் 30-ந் தேதிவரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. அதை பயன்படுத்தி, கருப்பு பணத்தை தெரிவித்தவர்களுக்கு 45 சதவீத வரி விதிக்கப்பட்டது.

    அந்த வாய்ப்பை பயன்படுத்தாமல், தற்போது வங்கியில் கருப்பு பணத்தை டெபாசிட் செய்தவர்களுக்கு சற்று கூடுதலாக வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்ததாக முன்னர் தகவல்கள் வெளியாகின, அத்துடன், வருமான வரிபோக மீதியுள்ள டெபாசிட் பணத்தில் பாதிப்பணத்தை 4 ஆண்டுகளுக்கு எடுக்க முடியாது என்ற கட்டுப்பாட்டையும் விதிக்க முடிவு செய்யப்பட்டதாக தெரியவந்தது.

    அதே சமயத்தில், இந்த வாய்ப்பையும் பயன்படுத்தாமல், வருமான வரித்துறையே கண்டுபிடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், அத்தகையவர்களின் கருப்பு பணத்துக்கு 90 சதவீத வருமான வரியும் அபராதமும் விதிக்கப்படும். வருமான வரி போக மீதியுள்ள டெபாசிட் பணத்தை நீண்ட காலத்துக்கு எடுக்க முடியாது.

    மத்திய அரசின் இந்த புதிய திட்டத்துக்கு வருமான வரி சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்தவாரம் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில், இந்த சட்ட திருத்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த புதிய வரியை விதிப்பது தொடர்பாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று பாராளுமன்றத்தில் வருமான வரி சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார்.

    இன்று தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவில், ‘வருமானத்தை மீறிய வகையில் சம்பாதித்து வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு 30 சதவீதம் வருமான வரியும் பத்து சதவீதம் அபராதமும், இதற்கான 33 சதவீதம் கூடுதல் வரியும் விதிக்கப்படும். இப்படி வசூலிக்கப்படும் வரிப்பணத்தில் இருந்து 25 சதவீதம் பிரதமரின் ‘கரிப் கல்யாண் ‘ எனப்படும் ஏழை மக்களுக்கான நல்வாழ்வு நிதியில் டெபாசிட் செய்யப்படும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

    அதேவேளையில், வருமான வரித்துறையினரின் சோதனையில் கண்டுபிடிக்கப்படும் கணக்கில் வராத டெபாசிட் தொகைக்கு 75 சதவீதம் வரியும், 10 சதவீதம் அபராதமும் விதிக்க இந்த சட்டத்திருத்தம் வகை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×