search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூபாய் நோட்டு பிரச்சினை: கேரளாவில் நாளை முழு அடைப்பு
    X

    ரூபாய் நோட்டு பிரச்சினை: கேரளாவில் நாளை முழு அடைப்பு

    ரூபாய் 500, 1000 நோட்டு பிரச்சினை தொடர்பாக கேரளாவில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

    புதுடெல்லி:

    மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால் மக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றி வருகிறார்கள்.

    இதில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளதால் பொது மக்கள் தேவையான அளவு பணம் எடுக்க முடியாமல் தவிக்கிறார்கள். வங்கிகளில் பணத்தட்டுப்பாடும், சில்லரை தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

    நாட்டில் உள்ள பெரும் பாலான ஏ.டி.எம்.கள் செயல்படாமல் மூடிக்கிடக்கின்றன. சில ஏ.டி.எம்.கள் மட்டும் செயல்படுகிறது. அதிலும் போதிய அளவு பணம் இல்லாமல் தீர்ந்து விடுகிறது.

    ரூபாய் நோட்டு பிரச்சினையை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கிளப்பி அமளியில் ஈடுபட்டதால் ஒருவாரமாக சபை நடவடிக்கைகள் முடங்கியது. பாராளுமன்றத்துக்கு வெளியேயும் எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டன.

    200 எம்.பி.க்கள் இதில் கலந்து கொண்டனர். கருத்து வேறுபாடுகள் கொண்ட கட்சிகள் கூட இந்த போராட்டத்தில் ஒன்று சேர்ந்து கலந்து கொண்டன.

    பணப்பிரச்சினையை மையமாக வைத்து காங்கிரஸ், கம்யூனிஸ்டு, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஓரணியில் நின்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    இந்த நிலையில் ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தை கண்டித்து இடது சாரி கட்சிகளும், பல்வேறு எதிர்க்கட்சிகளும் நாளை (28-ந்தேதி) நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

    கம்யூனிஸ்டு ஆட்சி நடந்து வரும் கேரளாவில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

    இந்த முழு அடைப்புக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிப்பதாக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா அறிவித்துள்ளார்.

    மேற்கு வங்காளத்தில் நாளை இடதுசாரி கட்சிகள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. கொள்கை அளவில் ரூபாய் நோட்டு விவகாரத்தை திரிணாமுல் காங்கிரஸ் எதிர்த்தாலும் வேலை நிறுத்தத்தை அக்கட்சி ஆதரிக்கவில்லை.

    அதே வேளையில் மத்திய அரசை கண்டித்து திரிணாமுல் காங்கிரஸ் நாளை தனியாக பேரணி நடத்துகிறது. வேலை நிறுத்தத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கு வங்காள அரசு மேற்கொண்டு வருகிறது. அன்றைய தினம் கூடுதலாக 2,600 பஸ்கள் இயக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

    பீகார் மாநிலத்தில் நாளை வேலை நிறுத்தத்துக்கு ஐக்கிய ஜனதா தளம் அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதன் கூட்டணி கட்சியான ராஷ்டிரீய ஜனதா தளம் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

    உத்தரப்பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் ரூபாய் நோட்டு வாபஸ் பிரச்சினையில் அக்கட்சியின் எம்.பி. நரேஷ் அகர்வால் மத்திய அரசை கடுமையாக சாடினார். ஆனால் பொது செயலாளர் அமர்சிங் பிரதமர் மோடி நடவடிக்கையை பாராட்டியுள்ளார்.

    தமிழகத்தில் நாளை மத்திய- மாநில அரசுகளை கண்டித்து தி.மு.க. சார்பில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்தார்.

    சென்னையில் காமராஜர் சாலையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்போது இடம் மாற்றப்பட்டு சென்னை ராஜாஜி சாலையில் கலெக் டர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். இதே போல் மாவட்ட தலை நகரங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    நாளை நடைபெறும் தி.மு.க. போராட்டத்தில் காங்கிரஸ், பெருந்தலைவர் மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி ஆகியவை கலந்து கொள்கின்றன.

    கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் நாளை மதுரையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளார்.

    இதேபோல் மத்திய அரசை கண்டித்து நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு த.மா.கா. முழு ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சி யின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×