search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானின் வருங்கால ராணுவ தளபதியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: பிக்ரம் சிங் பேட்டி
    X

    பாகிஸ்தானின் வருங்கால ராணுவ தளபதியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: பிக்ரம் சிங் பேட்டி

    போர்க்கலை தந்திரங்களில் வல்லவரான பாகிஸ்தானின் வருங்கால ராணுவ தளபதி குவாமர் ஜாவேத் பஜ்வா விவகாரத்தில் இந்தியா கவனமுடன் இருக்க வேண்டும் என இந்திய ராணுவத்தின் ஓய்வுபெற்ற தளபதி பிக்ரம் சிங் எச்சரித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பாகிஸ்தான் என்ற தனிநாடு சுதந்திரம் அடைந்த பிறகும் பாதிகாலத்திற்கும் மேலாக அங்கு ராணுவ ஆட்சியே நடைபெற்றுள்ளது. பாகிஸ்தானின் சக்திமிக்க நபர் என்று விவாதிக்கக்கூடிய அளவிற்கு அந்நாட்டின் ராணுவ தளபதி கருதப்படுகிறார். அதனால், ராணுவ தளபதி நியமனம் என்பது பாகிஸ்தானில் முக்கியத்துவம் பெறுகிறது.

    பாகிஸ்தானின் தற்போதைய ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் பதவிக்காலம் நவம்பர் 29-ம் தேதியுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது. இதையடுத்து புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் குவாமர் ஜாவேத் பஜ்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

    வரும் செவ்வாய்க்கிழமை ரஹீல் ஷெரீப் முறைப்படி ஓய்வுபெற்றதும், 30-ம் தேதி பாகிஸ்தானின் புதிய ராணுவ தளபதியாக பஜ்வா பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போது பாகிஸ்தான் ராணுவத்தின் பயிற்சி மற்றும் மதிப்பீட்டு பிரிவில் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக பதவி வகித்து வரும் பஜ்வா, இதற்கு முன்னர் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையில் இடம்பெற்றிருந்தார்.

    இந்நிலையில், பாகிஸ்தானின் வருங்கால ராணுவ தளபதி குவாமர் ஜாவேத் பஜ்வா விவகாரத்தில் இந்தியா கவனமுடன் இருக்க வேண்டும் என இந்திய ராணுவத்தின் ஓய்வுபெற்ற தளபதி பிக்ரம் சிங் எச்சரித்துள்ளார்.

    காங்கோ நாட்டில் அமைதியை நிலைநாட்டச் சென்ற ஐ.நா. அமைதிப்படையில் இந்திய ராணுவ முன்னாள் தளபதி பிக்ரம் சிங்கின் தலைமையின்கீழ் பாகிஸ்தானின் வருங்கால ராணுவ தளபதி குவாமர் ஜாவேத் பஜ்வா ஏற்கனவே பணியாற்றியுள்ளார்.

    அவரை போர்க்கலையில் வல்லவர் என்று குறிப்பிட்டுள்ள பிக்ரம் சிங், மிக சிறப்பான செயலாற்றலை வெளிப்படுத்தக் கூடியவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    உலக அமைதிக்காக பாடுபட வேண்டும் என்ற நோக்கத்தில் ஐ.நா. அமைதிப்படையில் பணியாற்றுவது வேறு. ஆனால், தனது தாய்நாட்டுக்கு திரும்பிய பின்னர் நாட்டின் நலன்தான் முக்கியம் என்றாகிவிடும். எனவே, பஜ்வாவின் அணுகுமுறைகளை இந்தியா நிதானமாகவும், கவனமாகவும் பார்க்க வேண்டியுள்ளது என பிக்ரம் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

    உள்நாட்டு தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு பஜ்வா முன்னுரிமை அளிக்ககூடும் என நம்பிக்கை தெரிவித்துள்ள பிக்ரம் சிங், முந்தைய பணி அனுபவத்தால் இந்திய எல்லையோரம் உள்ள எல்லா பகுதிகளைப் பற்றியும் நன்றாக அறிந்து வைத்திருக்கும் பஜ்வா, இருபக்கங்களிலும் (இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதிகள்) தற்போதைய களநிலவரம் என்ன என்பது நன்றாக தெரியும் என்றும் கூறியுள்ளார்.
    Next Story
    ×