search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்னணு வங்கியில் பண பரிவர்த்தனையை விரிவுபடுத்துங்கள்: அருண்ஜெட்லி வேண்டுகோள்
    X

    மின்னணு வங்கியில் பண பரிவர்த்தனையை விரிவுபடுத்துங்கள்: அருண்ஜெட்லி வேண்டுகோள்

    சிறப்பு திட்டம் தீட்டி மின்னணு வங்கியில் பண பரிவர்த்தனையை விரிவுபடுத்துமாறு வங்கிகளுக்கு நிதி மந்திரி அருண் ஜெட்லி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    புதுடெல்லி:

    சிறப்பு திட்டம் தீட்டி மின்னணு வங்கியியல் பண பரிவர்த்தனையை விரிவுபடுத்துமாறு வங்கிகளுக்கு நிதி மந்திரி அருண் ஜெட்லி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் மத்திய அரசின் அதிரடி முடிவு, அதனால் ஏற்படும் தாக்கம், நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகளுக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவுவதால், சில்லரை வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, பல்வேறு வங்கி தலைவர்களை ‘வீடியோ கான்பரன்ஸ்’ என்னும் காணொலி காட்சி வழியாக சந்தித்து விவாதித்ததைத் தொடர்ந்து, டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
    அப்போது அவர் கூறியதாவது:-

    மின்னணு வங்கியியல் பண பரிவர்த்தனை முறைக்கு (டிஜிட்டல் பாங்கிங்) மக்கள் மாறவில்லை என்று அரசியல்வாதிகள் கூறலாம். ஆனால் பல வங்கிகள் இதில் வெற்றி கண்டுள்ளன. சில்லரை விற்பனையை பொறுத்தமட்டில் 14 லட்சம் பி.ஓ.எஸ். கருவிகள் (பொருட்களை வாங்கிவிட்டு மின்னணு முறையில் பணம் செலுத்தும் கருவிகள்) உள்ளன. இதை பல மடங்கு உயர்த்த வேண்டும். இவை இங்கு தயாரிக்கப்படுவதில்லை. இறக்குமதி செய்யப்படுகின்றன.

    வங்கியின் வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டுகள், பிரிபெய்டு கார்டுகள், இ வேலட் என்னும் மின்னணு பணப்பை, மொபைல் செயலிகள் ஆகியவற்றை பயன்படுத்தப்போகிறார்கள்.

    நாட்டில் 80 கோடி கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. 40 கோடி கார்டுகள் தீவிரமாக பயன்படுத்தப்படுகின்றன. இது ஏற்கனவே வந்து விட்ட மாற்றம்.

    வங்கி தலைவர்களை சந்தித்ததின் ஒரே முக்கிய நோக்கம், மின்னணு வங்கியியல் பண பரிவர்த்தனையை சிறப்பு திட்டம் தீட்டி விரிவுபடுத்தச்செய்வதுதான். நிதி சீர்திருத்தத்தின் முக்கிய நோக்கம், ரூபாய் நோட்டு புழக்கத்தை குறைப்பதுதான்.

    மின்னணு வங்கியியல் பண பரிவர்த்தனை முறையை ஊக்குவிக்க நிதிச்சேவைகள் துறையின் கூடுதல் செயலாளர் அனில் குமார் காச்சி தலைமையில் பணிக்குழு ஒன்று அமைக்கப்படுகிறது. இது தொடர்பான ஒட்டுமொத்த நடவடிக்கைகளையும் இந்த குழு கவனிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வங்கி தலைவர்களை நிதி மந்திரி அருண் ஜெட்லி சந்தித்து பேசியபோது, வழக்கமான கடன் வழங்கும் நடவடிக்கைகளை குறிப்பாக முத்ரா கடன்களை வழங்கும் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குமாறு கேட்டுக்கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.
    Next Story
    ×