search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இன்றும் எதிர்க்கட்சிகள் அமளி: பாராளுமன்றம் 12 மணி வரை ஒத்திவைப்பு
    X

    இன்றும் எதிர்க்கட்சிகள் அமளி: பாராளுமன்றம் 12 மணி வரை ஒத்திவைப்பு

    ரூபாய் நோட்டு மாற்றம் குறித்து இன்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் பிரச்சனை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
    புதுடெல்லி:

    புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததையடுத்து அந்த நோட்டுக்களை மாற்றும் பணிகள் மற்றும் டெபாசிட் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. போதிய முன்னேற்பாடுகளை செய்யாமல் அரசு திடீரென இதனை நடைமுறைப்படுத்தியதால், பணப்புழக்கம் இன்றி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    இதனால் எதிர்க்கட்சிகள் இவ்விவகாரத்தை பாராளுமன்றத்தில் எழுப்பியதுடன், வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி விவாதத்தில் பங்கேற்கவேண்டும் என்றும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்தடுத்த இடையூறுகள், தொடர் ஒத்திவைப்புகள் என பாராளுமன்றம் முடங்கியுள்ளது.

    எனவே, பிரதமர் மோடி இன்று மாநிலங்களவைக்கு வரலாம் என தகவல்கள் வெளியாகின. இதனால், இன்றைய விவாதத்தின்போது பிரதமரின் நடவடிக்கைக்கு தங்கள் எதிர்ப்பினை கடுமையாக தெரிவிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன. அதேசமயம், மத்திய அரசுடன் வரும் 28-ம் தேதி வரை எந்த சமரச பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என்று முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலையில் மீண்டும் பாராளுமன்றம் கூடியது. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் ரூபாய் நோட்டு விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் கோஷமிட்டனர். அவர்களுக்கு பதிலடியாக ஆளுங்கட்சி உறுப்பினர்களும் பேசியதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    மாநிலங்களவையில் கடும் அமளிக்கிடையே நிதி மந்திரி அருண் ஜெட்லி விளக்கம் அளித்தார். இன்று விவாதம் நடத்த அனுமதிக்காவிட்டால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாருக்கும் பேச அனுமதி அளிக்க முடியாது என்று அவர் எச்சரித்தார். எனினும், அவரது விளக்கத்தை ஏற்காத எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பிரதமர் மோடி பதிலளிக்க வலியுறுத்தி கோஷமிட்டதால் அவையில் கூச்சல் குழப்பம் நீடித்தது. இதனால் மாநிலங்களவையும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
    Next Story
    ×