search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு அலுவலகங்களிலும் மின்னணு முறையில் பணப் பரிவர்த்தனை செய்ய உத்தரவு
    X

    அரசு அலுவலகங்களிலும் மின்னணு முறையில் பணப் பரிவர்த்தனை செய்ய உத்தரவு

    அனைத்து அரசு அலுவலகங்களிலும் மின்னணு முறையில் பணப் பரிவர்த்தனை செய்யும்படி மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
    புதுடெல்லி:

    அனைத்து அரசு அலுவலகங்களிலும் மின்னணு முறையில் பணப் பரிவர்த்தனை செய்யும்படி மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

    மத்திய அரசின் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மின்னணு பணப்பரிவர்த்தனை தொடர்பாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-

    புதிய ரூ.500 மற்றும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வினியோகிக்கும் வகையில், நாடு முழுவதும் மொத்தம் உள்ள 2 லட்சத்து 20 ஆயிரம் ஏ.டி.எம். எந்திரங்களில் தற்போது 82 ஆயிரத்து 500 எந்திரங்கள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன.

    இதனால் படிப்படியாக பண வினியோகம் சீரடையும். மற்ற எந்திரங்களை மாற்றி அமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    மின்னணு முறையில் பணம் செலுத்துவதை பரவலாக ஊக்கப்படுத்தும் விதமாக வங்கி வாடிக்கையாளர்கள் ‘டெபிட் கார்டு’ மூலம் பணம் செலுத்துவதற்கு டிசம்பர் 31-ந்தேதி வரை இனி சேவை கட்டணம் எதுவும் செலுத்தவேண்டியது இல்லை. இது ஏ.டி.எம். டெபிட் கார்டு பயன்படுத்துவோருக்கும் பொருந்தும்.

    அனைத்து பொதுத்துறை வங்கிகள், தனியார் துறை வங்கிகள் மற்றும் இதுபோன்ற சேவைகளை வழங்கும் இதர நிறுவனங்களும் மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று வாடிக்கையாளர்கள் பணம் செலுத்துவதற்கு சேவை வரி பெறுவதில்லை என ஒப்புக்கொண்டு உள்ளன.

    இதேபோல் ரெயில்வே ஆன் லைன் மூலம் எடுக்கப்படும் இ-டிக்கெட்டுகளுக்கு சேவை கட்டணமும், மொபைல் பேங்க்கிங் உள்ளிட்ட வங்கி சேவைகளுக்கான கட்டணமும் டிசம்பர் 31-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    இந்த திட்டத்திற்கு ஒப்புக் கொண்டுள்ள பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளுக்கு நன்றி. மற்ற வங்கிகளும் இதை ஏற்றுக் கொண்டு இதற்கென தனிச் சுற்றறிக்கை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

    ‘இ-வாலெட்’ முறை மூலம் பணம் செலுத்துவது ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக அதிகரிக்கப்படுகிறது.
    நமது பொருளாதாரத்தில் மின்னணு பண பரிவர்த்தனையை தீவிரப்படுத்தும் வகையிலும், அதிக அளவிலான மக்களை இதனை பயன்படுத்திக் கொள்ளும் விதமாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.

    அனைத்து அரசு அலுவலகங்களும் மின்னணு முறையை மட்டுமே பயன்படுத்தி பண பரிமாற்றம் செய்து கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    வருகிற 1-ந்தேதி முதல் அரசு ஊழியர்களுக்கு ரொக்கமாக சம்பளம் வழங்கப்படமாட்டாது. அவர்களுக்கு மின்னணு முறையில் மட்டுமே சம்பளம் செலுத்தப்படும். இதற்கான உத்தரவையும் மத்திய அரசு பிறப்பித்து இருக்கிறது.

    இதேபோல் அரசுடன் தொடர்புடைய தனியார் முகமைகள், ஒப்பந்ததாரர்கள், தனி நபர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ‘இன்டர்நெட் பேங்க்கிங்’, ஒருங்கிணைந்த பரிவர்த்தனை இடைவழி, கார்டுகள், ஆதாருடன் இணைந்த பணப்பரிமாற்றம் ஆகிய மின்னணு முறைகள் வழியாக பணப்பரிவர்த்தனை செய்வது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.

    காசோலை, வரைவோலை ஆகியவற்றை வழங்குவதை தவிர்க்கும் விதமாகவும், பணத்தை ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாக மேற்கொள்ளவும் இது ஒரு வாய்ப்பாக அமையும்.

    இதேபோல் நபார்டு வங்கி மூலம் பயிர்க்கடன் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நபார்டு வங்கி மூலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.21 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. கிராம கூட்டுறவு வங்கிகள் வரை இந்த பணம் வினியோகிக்கப்படும்.

    கூட்டுறவு வங்கிகள் பயிர்க்கடனை விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இது குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமையும்.

    நாட்டின் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் மின்னணு முறையில் கட்டணம் செலுத்த வழிவகை செய்யப்படுகிறது. புதிய வாகனங்கள் அனைத்திலும் அதன் உற்பத்தியாளர்கள் இதற்காக ‘ரேடியோ அலைவரிசையை அடையாளம் காணுதல்’ என்னும் ‘ஆர்.எப்.ஐ.டி’ சாதன வசதியை கட்டாயம் இணைக்கவேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவுறுத்தி இருக்கிறது.

    இதன் மூலம் சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது. இதற்கான நவீன வசதி பொருத்தப்பட்ட வாகனங்கள் சுங்கச் சாவடிகளில் நிற்காமல் பயணம் செய்யலாம். இதற்கான பணப்பரிவர்த்தனையும் மின்னணு முறையிலேயே அமையும். சுங்கச் சாவடி கட்டணம் ஆர்.எப்.ஐ.டி. கார்டு மூலம் கழித்துக் கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×