என் மலர்
செய்திகள்

டெல்லியில் பிரதமருடன் அ.தி.மு.க. எம்.பி.க்கள் தம்பிதுரை உள்பட 3 பேர் சந்திப்பு
சென்னை:
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அ.தி. மு.க. எம்.பி.க்களான பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை, வேணு கோபால், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அத்துமீறி தாக்கிய சம்பவம் நடைபெற்று உள்ளது.
நேற்று நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை அருகே பாக்ஜலசந்தியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.
அதில் அரவிந்தன், பால முருகன் ஆகிய 2 மீனவர்கள் மீது குண்டு பாய்ந்துள்ளது. உயிர் தப்பிய இருவரும் படுகாயத்துடன் புதுச்சேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முதல்-அமைச்சர் ஜெயலலிதா சார்பாக வலியுறுத்துகிறோம்.
எங்களது மீனவர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உறுதியாக உள்ளார்.
சமீபத்தில் இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் நடந்த பேச்சு வார்த்தையில் மீனவர்கள் தாக்கப்பட கூடாது என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால் அதையும் மீறி இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இது அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளது.
எனவே இந்தியாவுக்கான இலங்கை தூதரை அழைத்து கண்டிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பின்னர் தம்பித்துரை செய்தியாளர்களிடம் கூறியதாவது-
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுபடி பிரதமர் மோடியை சந்தித்து மனு கொடுத்துவிட்டு வந்துள்ளோம்.
அதில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கியது குறித்து வலுவான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
கச்சத்தீவை மீட்க முதல்- அமைச்சர் அம்மா ஏற்கனவே சுப்ரீம்கோர்ட்டில் தொடர்ந்து வழக்கு உள்ளது. தமிழக அரசும் இதை நடத்துகிறது.
1974-ம் ஆண்டு இந்தியா இலங்கை ஒப்பந்தத்தை ரத்து செய்து, கச்சத்தீவை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையையும் இப்போது மனுவில் சுட்டி காட்டி இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.