என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.எஸ்.எஸ். வழக்கு: ராகுல் நாளை கோர்ட்டில் ஆஜர்
    X

    ஆர்.எஸ்.எஸ். வழக்கு: ராகுல் நாளை கோர்ட்டில் ஆஜர்

    மகாத்மா காந்தியைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என்று கூறியதாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் நாளை அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமின் பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    மும்பை:

    கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின்போது மராட்டிய மாநிலம், பிவாண்டி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர்தான் மகாத்மா காந்தியை கொன்றார்கள் என்று அவதூறாக பேசியதாக ராகுல் மீது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்த உள்ளூர் தலைவரான குன்ட்டே என்பவர் பிவான்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இவ்வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ராகுல் காந்திக்கு பிவான்டி நீதிமன்றம் அடுத்தடுத்து சம்மன்களை அனுப்பியது. அந்த சம்மன்களை ரத்துசெய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் காந்தி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, நாரிமன் அடங்கிய அமர்வின்முன் கடந்த செப்டம்பர் மாதம் விசாரணைக்கு வந்தது.

    காந்தியைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என்று தான் கூறவில்லை, கொன்றவர் அந்த அமைப்புடன் தொடர்புடையவர் என்றுதான் கூறினேன் என்று ராகுல் காந்தி முன்னர் மும்பை உயர் நீதிமன்றத்தில் கூறியதை இறுதியான, பதிவு செய்யக்கூடிய வாக்குமூலமாக புகார் அளித்தவர்கள் ஏற்றுக் கொண்டால் சம்மன்களை ரத்து செய்வோம் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

    இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட தனது வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக ராகுல் காந்தி அறிவித்தார்.

    இந்நிலையில், பிவான்டி கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள வழக்கில் நாளை ராகுல் காந்தி நேரில் ஆஜராகி ஜாமின் பெற தீர்மானித்துள்ளதாக அவரது வழக்கறிஞர் நாராயணன் அய்யர் இன்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×