search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழைய நோட்டுகளை மாற்ற முடியாததால் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கூட்டம் குறைந்தது
    X

    பழைய நோட்டுகளை மாற்ற முடியாததால் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கூட்டம் குறைந்தது

    ரூ.500 ரூ.1000 நோட்டுகளை மாற்ற முடியாததால் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கூட்டம் 25 சதவீதம் குறைந்துள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் சராசரியாக ஒரு லட்சம் பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை சற்று அதிகமாக இருக்கும்.

    இந்த நிலையில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு காரணமாக திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பழைய ரூபாய் நோட்டுகளை பொதுஇடங்களில் பயன்படுத்த இயலாது என்பதால் பலர் திருப்பதி பயணத்தை ஒத்திப் போட்டுள்ளனர்.

    இதன் காரணமாக கடந்த 5 நாட்களாக திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கூட்டம் குறைந்து விட்டது. 25 முதல் 30 சதவீதம் அளவுக்கு பக்தர்கள் கூட்டம் குறைந்து விட்டதாக திருப்பதி - திருமலை தேவஸ்தான டிரஸ்டிகளில் ஒருவரான ராமச்சந்திர ரெட்டி கூறினார்.

    பக்தர்கள் வருகை 25 சதவீதம் குறைந்தாலும் திருப்பதி ஏழுமலையானுக்கு கிடைக்கும் வருமானம் குறையவில்லை. மாறாக உண்டியல் வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்து இருக்கிறது.

    மத்திய அரசு செல்லாது என்று அறிவித்துள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுகளை பக்தர்கள் அதிகமாக உண்டியலில் செலுத்துவதே உண்டியல் வசூல் திடீரென அதிகரித்ததற்கு காரணமாகும். கடந்த 4 நாட்களாக உண்டியலில் அதிக அளவில் பழைய ரூ.500 நோட்டுகள் போடப்படுகிறது.

    இதையடுத்து பணம் செலுத்தும் பகுதியில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் மேலும் ஒரு உண்டியலை வைத்துள்ளனர்.

    வழக்கமாக திருப்பதி ஆலயத்துக்கு சிறப்பு தரிசன டிக்கெட் கட்டணமான ரூ.300 டிக்கெட் விற்பனை மூலம் சராசரியாக ரூ.3 கோடி கிடைக்கிறது. உண்டியல் வசூல் தினமும் சுமார் ரூ.1 கோடி, ரூ.1½ கோடி வரை இருக்கும்.

    ஆனால் தற்போது தினமும் உண்டியல் வசூல் ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை கிடைக்கிறது. இந்த வசூல் பணத்தை திருப்பதி ஆலயம் வழக்கமான முறையில் வங்கிகளில் செலுத்தி வருகிறது.

    இதற்கிடையே திருப்பதிக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை காணிக்கையாக அளிப்பதற்கு கூடுதல் கால அவகாசத்தை கேட்க இருப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் கூறினார்கள். இது பக்தர்களின் எளிதான வழிபாட்டுக்கு வழி வகுக்கும் என்று அதிகாரிகள் எதிர் பார்க்கிறார்கள்.

    அதிகாரிகள் இது தொடர்பாக கூறுகையில், “பக்தர்கள் விரும்பும் வரை பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை உண்டியலில் செலுத்தலாம். நாங்கள் எந்த பக்தரையும் தடுக்க மாட்டோம். அவர்கள் காணிக்கை செலுத்துவது ஏழுமலையான் மீதுள்ள நம்பிக்கையுடன் தொடர்புடையது. எனவே பக்தர்கள் நம்பிக்கை வி‌ஷயத்தில் நாங்கள் குறுக்கிட மாட்டோம்” என்றனர்.

    Next Story
    ×