search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பையில் கடந்த 20 நாளில் 135 கார்கள் மாயம்
    X

    மும்பையில் கடந்த 20 நாளில் 135 கார்கள் மாயம்

    மும்பையில் கடந்த 20 நாளில் 135 கார்கள் மாயமாகி உள்ளன. இந்த கார்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக திருடப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    மும்பை:

    நிதிதலைநகரான மும்பையில் வாகன நெருக்கடிக்கு பஞ்சமில்லை. வீட்டிற்கு 2, 3 கார்கள் இருப்பதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அதிக எண்ணிக்கையில் இருப்பதால் தானோ, என்னவோ மும்பையில் அதிக கார் திருட்டும் நடைபெற்று வருகிறது. இங்கு திருடப்படும் கார்கள் வட மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    மும்பையில் கடந்த 20 நாட்களில் மட்டும் 135 கார்கள் மாயமாகி உள்ளதாக போலீசார் வெளியிட்டுள்ள தகவல்கள் கூறுகின்றன. இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    வழக்கமாக மும்பையில் காணாமல் போகும் கார்கள் அதிகளவில் பீகார், குஜராத்திற்கு கடத்தப்படுவது வழக்கம். அங்கு சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கடத்த இந்த கார்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    தற்போது உத்தரபிரேதசத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி உள்ளதால் அங்கு பிரசாரத்திற்கு செல்ல அதிகளவு கார்கள் தேவைப்படுகின்றன. எனவே தற்போது மும்பையில் கார் திருட்டு அதிகரித்துள்ளது.

    குறிப்பாக நெஞ்சாலையையொட்டி உள்ள மலாடு, சார்க்கோப், காந்திவிலி, முல்லுண்டு, பாண்டுப், காஞ்சூர்மார்க் ஆகிய பகுதிகளில் அதிகளவு கார்கள் திருடப்பட்டுள்ளன. திருடர்கள் இரவு 11 மணி முதல் அதிகாலை 2 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் கைவரிசையை காட்டுகின்றனர். அவர்கள் மும்பைக்கு வெளியே சென்று வேறு கும்பலிடம் திருட்டு காரை ஒப்படைக்கின்றனர். அந்த கும்பல் காரை கடத்தி செல்கிறது. கார் திருட்டு கும்பலை பிடிக்கும் வகையில் தகிசர், முல்லுண்டு சுங்க சாவடி பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த ஆண்டு மும்பையில் 3 ஆயிரத்து 324 கார்கள் திருட்டுபோய் உள்ளன. இதில் 997 கார்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×