என் மலர்

    செய்திகள்

    நீதித்துறையின் சுமையை குறைக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
    X

    நீதித்துறையின் சுமையை குறைக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கோர்ட்டு வழக்குகளில் அரசே அதிக வழக்குதாரராக இருக்கிறது. நீதித்துறையின் சுமையை குறைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
    புதுடெல்லி:

    டெல்லி ஐகோர்ட்டின் 50-வது ஆண்டுவிழா நேற்று நடந்தது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நீதித்துறை தனது அதிகபட்ச நேரத்தை அரசுக்காகத்தான் செலவழிக்கிறது. அரசு தான் அதிகமான வழக்கு தொடுப்பவராக இருக்கிறது. வழக்கு தொடுக்கும் முன்பு கருத்துகளை கலந்தாலோசித்து முடிவு எடுத்தால் நீதித்துறை மீதான இந்த சுமையை குறைக்க முடியும்.

    ஒரு ஆசிரியர் ஒரு திட்டத்திற்காக கோர்ட்டை அணுகி வெற்றி பெற்றால், அந்த தீர்ப்பு அதுபோன்ற ஆயிரக்கணக்கானவர்களுக்கும் அந்த பலனை அளிக்கும் அளவுகோலாக கொண்டால் நீதித்துறையின் எதிர்கால சுமை கணிசமாக குறையும்.

    உறுதியான புள்ளிவிவரங்கள் இல்லை என்றாலும், குறைந்தபட்சம் 46 சதவீத கோர்ட்டு வழக்குகள் சேவை திட்டங்களில் இருந்து மறைமுக வரிகள் வரை அரசு தொடர்புடையதாக உள்ளது.

    இந்த வழக்குகளை குறைப்பது தொடர்பான ஒரு கொள்கையை இறுதி செய்வதில் மத்திய அரசு இதுவரை தோல்வியே கண்டுள்ளது. பல மாநிலங்கள் சட்ட அமைச்சகத்தின் 2010 வரைவு மசோதா அடிப்படையில் தங்கள் கொள்கைகளை வகுத்துள்ளன. சவால்கள் நிறைய உள்ளன. அதற்காக விட்டுவிட்டு ஓடமுடியாது. தொழில்நுட்பத்துடன் இணைந்து இதற்கான வழியை காணவேண்டும்.

    வழக்குகளை குறைப்பதற்கான ஒரு வரைவு கொள்கை தற்போதைய நவீனபோக்கை கவனத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதில் இறுதி முடிவு எடுக்கும் உரிமையை கோர்ட்டுக்கே வழங்கிவிடுவோம்.

    இன்று சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாள். வக்கீலான அவர் தனது வாழ்க்கையை நாட்டுக்கு சேவையாற்றுவதற்காக அர்ப்பணித்தார். அகில இந்திய சிவில் சர்வீசஸ் உள்பட அவரது பங்களிப்பு மகத்தானது. ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி பயிற்சி முடிந்து ஒரு மாவட்டத்துக்கு பணியமர்த்தும்போது அவர் தேசிய கண்ணோட்டத்தில் சிந்திக்க வேண்டும்.

    சர்ச்சைக்குரிய அகில இந்திய நீதித்துறை பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு சில மாநிலங்களும், ஐகோர்ட்டுகளும் எதிரான கருத்துகளை தெரிவித்தாலும், விவாதம் தான் ஜனநாயகத்தின் முக்கிய அம்சம். சட்ட பல்கலைக்கழகங்களில் இளைஞர்களுக்கு சட்டங்களை உருவாக்குவது குறித்து பயிற்சி அளிக்க வேண்டும்.

    இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.எஸ்.தாகுர் பேசும்போது, “நமது நேர்மை பற்றி மக்களின் கருத்துகளை நாம் ஆய்வு செய்ய வேண்டும். சில நேரங்களில் சில நிலைகளால் அல்லது மற்றவர்களால் நேர்வழியில் இருந்து விலகுவது ஒட்டுமொத்த நீதித்துறைக்கே இழிவை ஏற்படுத்தும். எனவே அனைத்து நிலைகளில் உள்ள நீதிபதிகளும் நீதிநெறிக்கும், தொழில் நேர்மைக்கும் மாறான எந்த சந்தேகங்களுக்கும், சமரசத்துக்கும் இடம் அளிக்காமல் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

    விழாவில் டெல்லி கவர்னர் நஜீப்ஜங், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×