search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அக்டோபர் முதல் மே வரை 160 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டுக்கு தேவை: உயர்மட்ட குழு அறிக்கை சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல்
    X

    அக்டோபர் முதல் மே வரை 160 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டுக்கு தேவை: உயர்மட்ட குழு அறிக்கை சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல்

    அக்டோபர் முதல் மே வரை 160 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டுக்கு தேவை என்று காவிரி உயர்மட்ட குழு அறிக்கையை சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது.
    புதுடெல்லி:

    தமிழகத்துக்கு பாசனம் உள்ளிட்ட தேவைக்காக காவிரி நீரை கர்நாடக அரசு ஆண்டு தோறும் 194 டி.எம்.சி. வழங்க வேண்டும். செப்டம்பர் வரை 134 டி.எம்.சி. வழங்கி இருக்க வேண்டும். ஆனால் 81 டி.எம்.சி. பாக்கி வைத்துள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் கர்நாடகா தண்ணீர் தர மறுப்பதால் சம்பா சாகுபடி கேள்விகுறியாகி உள்ளது. தண்ணீர் வழங்கும் படி கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரியும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசோ வாரியத்தை தற்போதைக்கு அமைக்க இயலாது என்று கைவிரித்து விட்டது. ஆனாலும் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி மத்திய நீர்வள கமி‌ஷனர் சி.எஸ்.ஜா தலைமையில் காவிரி உயர்மட்ட தொழில் நுட்ப குழுவை அமைத்தது.

    இந்த குழுவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் உயர் அதிகாரிகள் இடம் பெற்றனர்.

    உயர்மட்ட தொழில்நுட்ப குழுவினர் கடந்த 7 மற்றும் 8-ந்தேதிகளில் கர்நாடகா மாநிலத்துக்கு சென்று அங்குள்ள அணைகள், காவிரி பாசன பகுதிகளை ஆய்வு செய்தனர்.

    கடந்த 9-ந்தேதி தமிழ்நாட்டுக்கு வந்து மேட்டூர், பவானி சாகர் அணைகளையும், திருச்சி, தஞ்சை மற்றும் நாகப்பட்டினம் பகுதிகளில் உள்ள காவிரி பாசன பகுதிகளையும் ஆய்வு செய்தனர். அப்போது சம்பா நெல் பயிர்கள் பாதிப்பை கண்ணீர் மல்க விவசாயிகள் தெரிவித்தனர்.

    இந்த குழு சென்னையில் 11-ந்தேதி தமிழக அரசின் தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தது. அப்போது தமிழகத்தின் தண்ணீர் தேவை குறித்தும், பயிர் பாதிப்பு குறித்தும் வீடியோ ஆதாரத்துடன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

    இந்த நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக உயர்மட்ட தொழில்நுட்ப குழுவின் ஆய்வு அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

    காவிரி வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வரும் நிலையில் மத்திய குழுவின் இந்த ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    சி.எஸ்.ஜா தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    அக்டோபர் முதல் 2017 மே வரை தமிழகத்துக்கு 160 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது. 12 லட்சம் ஏக்கர் சாகுபடிக்கு 133 டி.எம்.சி. தண்ணீர் தேவை. தமிழக குடிநீர் தேவைக்காக 22 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி மட்டுமே நடைபெற்றுள்ளது.

    தமிழக கடலோர மாவட்டங்களில் நிலத்தடி நீர் உப்பாக மாறி உள்ளது. நிலத்தடி நீர் உப்பாக மாறி உள்ளதால் குடிநீருக்கும், சாகுபடிக்கும் மேட்டூர் அணையை மட்டுமே நம்பி இருக்கும் நிலை உள்ளது. நீர் மேலாண்மையில் புதிய முறைகளை செயல்படுத்த வேண்டும். விவசாயித்துக்கு சொட்டு நீர் பாசனத்தை பின்பற்ற வேண்டும்.

    தமிழ்நாடு, கர்நாடகா மாநில விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    42 தாலுகாக்களை கர்நாடகா அரசு வறட்சி பாதித்தவையாக அறிவித்து உள்ளது. மாண்டியாவில் அதிக அளவில் விவசாயிகள் தற்கொலை செய்து உள்ளனர்.

    கர்நாடகாவுக்கு மே 2017 வரை குடிநீர் மற்றும் பாசனத்துக்கு 65.48 டி.எம்.சி. தண்ணீர் தேவை. 4.27 லட்சம் ஏக்கர் சாகுபடிக்கு 36.38 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    மத்திய குழுவின் இந்த அறிக்கையில் நீர் இருப்பு பற்றிய விவரம் தெரிவிக்கப்படவில்லை.
    Next Story
    ×