search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்க மறுத்ததால் நடுரோட்டில் பெண்ணுக்கு பிரசவம்: குழந்தை பிறந்தது
    X

    அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்க மறுத்ததால் நடுரோட்டில் பெண்ணுக்கு பிரசவம்: குழந்தை பிறந்தது

    பீதர் அருகே அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்க மறுத்ததால் பெண் ஒருவருக்கு நடுரோட்டில் பிரசவம் நடந்தது. அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இது குறித்து விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    பீதர்:

    கர்நாடகம்-மராட்டியம் எல்லையில் அமைந்துள்ள கிராமத்தில் வசித்து வருபவர் சுரேகா திலீப். இவர் வசித்து வரும் கிராமம் மராட்டிய மாநிலத்தில் உள்ளது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சுரேகாவுக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, சுரேகாவை அவருடைய குடும்பத்தினர் பீதர் மாவட்டம் அவ்ராத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

    ஆஸ்பத்திரியில் இருந்த நர்ஸ், சுரேகாவுக்கு ரத்த அழுத்தத்தை சோதனை செய்தார். ஆனால், ஆஸ்பத்திரியில் இருந்த பெண் டாக்டர், சுரேகாவுக்கு பிரசவம் பார்க்க மறுத்துள்ளதாக தெரிகிறது. மேலும் உடனடியாக அவரே வேறு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்படி கூறியுள்ளார்.

    இதனால், அதிர்ச்சி அடைந்த அவருடைய குடும்பத்தினர் சுரேகாவை வேறு ஆஸ்பத்திரியில் அனுமதிக்க முயன்றனர்.  ஆனால், அந்த பகுதியில் வேறு எங்கும் ஆஸ்பத்திரி இல்லை. இதனால் சுரேகாவை அவருடைய குடும்பத்தினர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உட்கார வைத்தனர்.

    இதற்கிடையே, சுரேகா பிரசவ வலியால் அலறி துடித்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய குடும்பத்தினர் அரசு டாக்டரிடம் பிரசவம் பார்க்கும்படி கெஞ்சி உள்ளனர். இருப்பினும், பிரசவம் பார்க்க மறுத்த டாக்டர், 'சுரேகாவை ஆஸ்பத்திரி வளாகத்தில் இருந்து அழைத்து செல்லுங்கள். இல்லாவிட்டால் போலீசுக்கு போன் செய்வேன்' என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    மேலும், ஆம்புலன்ஸ் வசதியையும் அவர்களுக்கு டாக்டர் ஏற்படுத்தி கொடுக்கவில்லை. இதனால், செய்வதறியாது திகைத்த அவருடைய குடும்பத்தினர் சுரேகாவை ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே அழைத்து சென்றனர். சாலையில் நடந்து சென்றபோது பிரசவ வலி அதிகமாகி சுரேகா திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து அவருக்கு நடுரோட்டிலிலேயே அவருடைய குடும்பத்தினர் பிரசவம் பார்த்தனர். அப்போது, சுரேகாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

    இதையடுத்து சுரேகா மற்றும் அவருடைய குழந்தையையும் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்த அவருடைய உறவினர்கள் டாக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், உடனடியாக ஆஸ்பத்திரியில் தாயையும், சேயையும் அனுமதிக்க வேண்டும் என அவர்கள் கூறினர். இதை ஏற்ற டாக்டர், சுரேகாவையும், அவருடைய குழந்தையையும் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தார்.

    இந்த நிலையில், சம்பவம் குறித்து அறிந்ததும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து தாய்-சேயை பார்த்தனர். மேலும், சம்பவம் குறித்து சுரேகாவின் குடும்பத்தினரிடம் கேட்டு அறிந்து கொண்டனர். இதன் தொடர்ச்சியாக சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய பீதர் மாவட்ட கலெக்டர் அனுராக் திவாரி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 
    Next Story
    ×