search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதியில் பிரம்மோற்சவ விழா: இலவச தரிசனத்துக்கு அதிக நேரம் ஒதுக்கப்படும்
    X

    திருப்பதியில் பிரம்மோற்சவ விழா: இலவச தரிசனத்துக்கு அதிக நேரம் ஒதுக்கப்படும்

    திருப்பதியில் இலவச தரிசனத்துக்கு அதிகநேரம் ஒதுக்கீடு செய்யப்படும் என தேவஸ்தான அதிகாரி கூறியுள்ளார்.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் 3-ந்தேதியில் இருந்து 11-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது.

    அதையொட்டி திருமலை அன்னமயபவனில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் திருமலை- திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் சாம்பசிவராவ் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

    வருடாந்திர பிரம்மோற்சவ விழாவையொட்டி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் வெகுநேரம் பக்தர்களை காத்திருக்க வைக்காமல் அன்றைக்கு வரும் பக்தர்களை அன்றே சாமி தரிசனத்துக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவில் பின்பற்றப்பட்ட தரிசன நடைமுறைகளைபோல், இந்த ஆண்டும் அதே தரிசன நடைமுறையை கடைபிடித்து 3, 4 மணி நேரத்தில் பக்தர்களை தரிசனத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இலவச தரிசனத்துக்கு அதிகநேரம் ஒதுக்கீடு செய்யப்படும்.

    பிரம்மோற்சவ விழா நாட்களில் ஆர்ஜித சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும். தங்கும் விடுதிகளில் முன்பதிவு செய்வது ரத்து செய்யப்பட்டுள்ளது. அமைனிட்டி காம்ப்ளக்சில் 24 மணிநேரமும் பக்தர்கள் தங்கி தரிசனத்துக்குச் செல்ல வசதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தலைமுடி இறக்கும் பணிக்காக கல்யாண கட்டாக்களில் கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். லட்டு பிரசாதம் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க 7 லட்சம் லட்டுகள் இருப்பு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் 1 மற்றும் 2-ல் தங்க வைக்கப்படும் பக்தர்களுக்கும், நடந்து வரும் திவ்ய தரிசன பக்தர்களுக்கும் அன்னதானப்பிரசாதம், டீ, பால், காபி ஆகியவை வழங்கப்படும்.

    மலைப்பாதைகளில் விபத்துகள் நடந்தாலும், திருமலையில் அசம்பாவித சம்பவங்கள் நடந்தாலும், அவற்றில் இருந்து பக்தர்களை பாதுகாக்க 24 மணிநேரமும் ஆம்புலன்ஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு நடைபாதைகளில் மின் விளக்குகள் சரியாக எரியவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×