search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அகிலேஷ்-ஷிவ்பால் மோதலால் நெருக்கடி: முலாயம்சிங்கின் சமரச முயற்சி தோல்வி - நீக்கப்பட்ட மந்திரிக்கு மீண்டும் பதவி
    X

    அகிலேஷ்-ஷிவ்பால் மோதலால் நெருக்கடி: முலாயம்சிங்கின் சமரச முயற்சி தோல்வி - நீக்கப்பட்ட மந்திரிக்கு மீண்டும் பதவி

    உத்தர பிரதேசத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும் ஷிவ்பாலுக்குமிடையே ஏற்பட்ட மோதலை முடிவுக்கு கொண்டு வர முலாயம் சிங்கின் சமரச முயற்சி தோல்வியடைந்தது.

    புதுடெல்லி:

    உ.பி.யில் அகிலேஷ் யாதவ் மந்திரி சபையில் ஏற்பட்ட நெருக்கடியை தீர்க்க முலாயம்சிங் யாதவ் மேற்கொண்ட சமரச முயற்சி தோல்வியில் முடிந்தது.

    உத்தரபிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவுக்கும் அவரது சித்தப்பாவான மந்திரி ஷிவ்பால் சிங் யாதவுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

    சமாஜ்வாடி கட்சியுடன் குவாமி ஏதோ தள ஆட்சியை இனைக்க ஷிவ்பால் சிங் முயற்சி செய்தார். இதற்கு அகிலேஷ் யாதவ் முட்டுக்கட்டை போட்டதால் இந்த மோதல் உருவானது.

    தனது மந்திரி சபையில் இருந்த ஷிவ்பால் சிங்கின் ஆதரவு மந்திரிகள் சிலரை அகிலேஷ் யாதவ் நீக்கினார். இதனால் கோபம் அடைந்த முலாயம்சிங் யாதவ், அகிலேசிடம் இருந்த மாநிலத் தலைவர் பதவியை பறித்து ஷிவ்பால்சிங்கை நியமித்தார்.

    இதற்கு பதிலடியாக ஷிவ்பால் சிங் வசம் இருந்த முக்கிய இலாகாக்களை அகிலேஷ் யாதவ் பறித்து விட்டு சமூக நலத்துறையை வழங்கினார். இதனால் அதிருப்தி அடைந்த ஷிவ் பால்சிங் மந்திரி பதவியையும், மாநில தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

    இந்த அதிரடி நடவடிக்கைகளால் சமாஜ்வாடி கட்சியின் குடும்ப சண்டை பகிரங்கமாக வெடித்தது.

    இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர கட்சியில் உள்ள மற்ற நிர்வாகிகள் சமரச முயற்சி மேற்கொண்டனர். முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ், ஷிவ்பால் சிங் ஆகியோருடன் முலாயம்சிங்கும் பேச்சு நடத்தினார். ஆனால் இந்த சமரச முயற்சி தோல்வி அடைந்தது. முலாயம்சிங்கின் சமரச முயற்சி ஷிவ்பால் சிங்குக்கு ஆதரவாக இருந்ததாகவும், இதை அகிலேஷ் யாதவ் ஏற்க மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கிடையே அகிலேஷ் யாதவ் மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஷிவ்பால் சிங்கின் ஆதரவாளரான காயத்ரி பிரசாத் பிரஜாபதிக்கு மீண்டும் மந்திரி பதவி கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முலாயம்சிங் யாதவ் தெரிவித்துள்ளார். இது அகிலேஷ் யாதவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

    ஆனால் அகிலேஷ் யாதவ் கூறுகையில், கட்சிக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் எல்லாம் சரி செய்யப்பட்டு விட்டதாகவும் கூறினார்.

    Next Story
    ×