search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தோட்டாக்களால் துளைக்கப்பட்ட இளைஞரின் பிரேதம் கண்டெடுப்பு: காஷ்மீரில் மீண்டும் பதற்றம் - ஊரடங்கு உத்தரவு
    X

    தோட்டாக்களால் துளைக்கப்பட்ட இளைஞரின் பிரேதம் கண்டெடுப்பு: காஷ்மீரில் மீண்டும் பதற்றம் - ஊரடங்கு உத்தரவு

    ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் தோட்டாக்களால் துளைக்கப்பட்ட இளைஞரின் பிரேதம் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் அங்கு ஓரளவுக்கு தணிந்திருந்த பதற்றம் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து, சில மாவட்டங்களில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    ஸ்ரீநகர்:

    காஷ்மீரில் கடந்த ஜூலை 8-ம் தேதி, ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி பர்கான் வானி கொல்லப்பட்டதை தொடர்ந்து வன்முறை வெடித்தது. பிரிவினைவாதிகளின் தொடர் போராட்ட அறிவிப்புகளால் அங்கு கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பதற்றம் நீடிக்கிறது.

    இந்நிலையில், ஸ்ரீநகரின் ஹர்வான் பகுதியைச் சேர்ந்த இளைஞர் மோமின் அல்டாப் கனாய் என்பவர் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு பெல்லட் தோட்டாக்கள் பாய்ந்த நிலையில் பிரேதமாக கண்டெக்கப்பட்டார்.

    நேற்றிரவு ஹர்வான் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு பாதுகாப்புப் படையினர் பெல்லட் குண்டுகளை பயன்படுத்தினர். இந்த போராட்டத்தில் படையினர் தாக்குதலில் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போராட்டம் ஓய்ந்த பின்னர் மோமின் அல்டாப் கனாய் என்ற இளைஞர் மாயமாகியிருந்தார். இந்நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து காஷ்மீர் கலவர பலி 81 ஆக அதிகரித்துள்ளது.

    இதனால், காஷ்மீரில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுவதால் பாரமுல்லா, பட்டான், அனந்தநாக், சோபியான், புல்வாமா உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில் போலீசாருடன் ராணுவத்தினரும் முக்கிய பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×