search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    20-ந்தேதிக்கு பிறகும் தண்ணீர் திறக்க உத்தரவிட்டால் பதவியில் இருந்து விலக சித்தராமையா திட்டம்?
    X

    20-ந்தேதிக்கு பிறகும் தண்ணீர் திறக்க உத்தரவிட்டால் பதவியில் இருந்து விலக சித்தராமையா திட்டம்?

    20-ந்தேதிக்கு பிறகும் தண்ணீர் திறக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டால் பதவியில் இருந்து விலக சித்தராமையா திட்டம் தீட்டப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
    பெங்களூர்:

    காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு செய்தது.

    அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கடந்த 5-ந்தேதி வெளியிட்ட உத்தரவில், “தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து கர்நாடகா அரசு 10 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும்” என்று தெரிவித்தனர். பிறகு அந்த உத்தரவில் மாற்றம் செய்யப்பட்டு, காவிரியில் 20-ந்தேதி வரை தினமும் 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டது.

    இதையடுத்து கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு, வன்முறையை நடத்தின. தமிழர்களின் உடமைகள் அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டன. 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நாசப்படுத்தப்பட்டன. இதனால் இரு மாநிலங்களுக்கு இடையே இன்றுடன் 12-வது நாளாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) டெல்லியில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் காவிரி நதி நீர் கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதில் எடுக்கப்படும் முடிவு சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கையாக தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே 20-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காவிரி வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற உள்ளது.

    எனவே காவிரி நதி நீர் விவகாரத்தில் வரும் திங்கட்கிழமையும், செவ்வாய்க் கிழமையும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தினங்களாகக் கருதப்படுகிறது. இதனால் இரு மாநிலங்களிலும் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது.

    தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டிலும், காவிரி கண்காணிப்புக் குழு கூட்டத்திலும், கடந்த சில மாதங்களில் கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறக்காதால் எவ்வளவு தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும் என்ற நிலுவை அளவை புள்ளி விபரங்களுடன் தெரிவித்துள்ளது. மேலும் கோடை காலத்தில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க கூறப்பட்டுள்ள அம்சங்கள் பற்றியும் தமிழக அரசு தெளிவாக கூறியது. வரும் 20-ந்தேதி விசாரணையின் போதும் காவிரி ஆணைய உத்தரவை விளக்கிக் கூறி தண்ணீர் பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    தமிழக அரசு சட்ட ரீதியாக மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைகளால் கர்நாடக அரசு கடுமையாக திணறியபடி உள்ளது. அடுத்தக் கட்டமாக தமிழகத்துக்கு எத்தகைய பதிலடியை கொடுக்கலாம் என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமைய்யா அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும், சட்ட நிபுணர்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    கர்நாடகாவில் 2 ஆண்டுகளாக தென்மேற்கு பருவ மழை பொய்த்து கடும் குடிநீர் வறட்சி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்துக்கு அதிக அளவு தண்ணீர் திறக்க இயலாத நிலையில் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்க கர்நாடகா முடிவு செய்துள்ளது.

    ஆனால் சுப்ரீம் கோர்ட்டு இதை ஏற்குமா? என்று தெரியவில்லை. எனவே 20-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு காவிரியில் மேலும் தண்ணீர் திறக்க உத்தரவிடுமா என்ற எதிர்பார்ப்பு இரு மாநிலங்களிலும் பரபரப்பாக காணப்படுகிறது.

    ஒருவேளை காவிரியில் மேலும் தண்ணீர் திறக்க கர்நாடகா அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு 20-ந்தேதி உத்தரவிட்டால், மீண்டும் கன்னடர்கள் கலவரங்களில் ஈடுபடும் அபாயம் உள்ளது. ஏற்கனவே இந்த பிரச்சினையில் சித்தராமையா மீதும், காங்கிரஸ் கட்சி மீதும் கர்நாடக மக்கள் கடும் அதிருப்தியுடன் உள்ளனர். இந்த நிலையில் மேலும் தண்ணீர் திறந்தால் மாண்டியா, மைசூரு, பெங்களூரு மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியாமல் மக்களிடம் மேலும் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டிய திருக்கும் என்ற நெருக்கடி சித்தராமையாவுக்கு ஏற்பட்டுள்ளது.

    இது பற்றியெல்லாம் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ள சித்தராமையா அதிரடி முடிவு எடுக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி 20-ந்தேதிக்கு பிறகும் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டால் அதை ஏற்காமல், அதற்கு பதில் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தயாராகி வருகிறார். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு கட்டுப்பட இயலாது என்று அவர் துணிந்து எதிர்கொள்ள வியூகம் வகுத்துள்ளார்.

    முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகிய பிறகு ஆட்சியை கலைக்கவும் அவர் முடிவு செய்துள்ளார். இந்த அதிரடி நடவடிக்கைகள் மூலம் கர்நாடகா அரசியல் களத்தில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க வேண்டும் என்பது சித்தராமையாவின் திட்டமாக உள்ளது.

    கர்நாடகா சட்டசபைக்கு அடுத்து 2018-ம் ஆண்டு தான் தேர்தல் நடைபெற உள்ளது. காவிரி விவகாரத்தில் கோர்ட்டுக்கு அடிபணியாமல், தண்ணீர் திறக்க மறுத்து சட்ட சபையை கலைத்தால் மக்கள் ஆதரவு கிடைக்கும் என்று சித்தராமையா எதிர் பார்க்கிறார். இதன் மூலம் மீண்டும் தேர்தலில் காங்கிரசை வெற்றி பெற செய்ய முடியும் என்று அவர் நினைக்கிறார்.

    அதே சமயத்தில் ஆட்சி கலைக்கப்படும் பட்சத்தில் மத்திய அரசு ராணுவ பாதுகாப்புடன் காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடும். இதனால் கர்நாடகாவில் பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பு ஏற்படும். தேர்தலில் பா.ஜ.க.வை எளிதில் வீழ்த்த முடியும் என்று சித்தராமையா கருதுகிறார்.

    அவரது இந்த வியூகத்துக்கு காங்கிரஸ் மேலிடமும் ஒப்புதல் வழங்கி விட்டதாக கூறப்படுகிறது. இவையெல்லாம் நடக்குமா? என்பது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை பொறுத்தே அமையும். எனவே 20-ந்தேதி தீர்ப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×