search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகாராஷ்டிராவில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியில் சோகம்: 13 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
    X

    மகாராஷ்டிராவில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியில் சோகம்: 13 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

    மகாராஷ்டிர மாநிலத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பு நிகழ்ச்சியின் போது நீரில் மூழ்கி 13 பேர் பலியாகி உள்ளனர்.
    மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தி விழாவின் கடைசி நாள் நிகழ்வான ஆனந்த சதுர்த்தி நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி வீடுகள் மற்றும் அமைப்புகள் சார்பில் வழிபாடு நடத்தப்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. இதில் நாசிக் மாவட்டத்தில் விநாயகர் சிலை கரைப்பின்போது ராணுவ வீரர் சந்தீப் ஷிர்சாட் மற்றும் ராமேஷ்வர் ஆகிய 2 பேர் முசல்காவ் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதுதவிர நாசிக்கில் வெவ்வேறு இடங்களில் நடந்த விநாயகர் சிலை கரைப்பின்போது நீலேஷ் பாட்டீல், பூசன் காஸ்பே, சுமித் பவார், அமோல் பாட்டீல், ரோஷன் சால்வே ஆகிய 5 பேர் நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழந்தனர். கடந்த புதன்கிழமை இரவு முதல் பெய்த கனமழையால் நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து இருந்ததே, இந்த உயிரிழப்புகளுக்கு காரணம் என கூறப்படுகிறது.

    இதேபோல வார்தா மாவட்டத்தில் ஆனந்த சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலையுடன் செல்பி எடுக்க முயன்ற 3 மாணவர்கள் ஆற்றில் மூழ்கினர். இதில், ஒரு மாணவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். பலியான 2 பேரின் உடலை தீயணைப்பு படையினர் தேடிவருகின்றனர்.

    வாலுஜ்ஜில் பரமேஷ்வர் என்ற பள்ளி ஆசிரியர் விநாயகர் சிலை கரைப்பின் போது கோதாவரி ஆற்றில் கூட்ட நெரிசல் காரணமாக மூழ்கி பலி ஆனார். இதுபோல நாந்தெட்டில் மாநகராட்சி ஊழியர் ஒருவரும் தண்ணீரில் மூழ்கி பலியானார். ஜால்காவ் காங் ஆற்றில் விநாயகர் சிலை கரைப்பின்போது 2 இளைஞர்கள் வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டு பலி ஆனார்கள். இதில், ஒருவரின் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. புனேயில் விநாயகர் சிலை கரைப்பின்போது 2 வாலிபர்கள் மாயமானார்கள். அவர்கள் பற்றிய தகவல் ஏதும் கிடைக்கவில்லை. சிலை கரைப்பின்போது நீரில் மூழ்கி மொத்தம் 13 பேர் இறந்துள்ளனர்.

    இதுதவிர நாக்பூரில் கடந்த புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பிரசாதம் வழங்கப்பட்டபோது ஏற்பட்ட தகராறில், சண்டையை விலக்கிவிட முயன்ற மோனிஷா(வயது27) என்ற இளம்பெண் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார். அதே மாவட்டத்தில் பச்போலியில் உள்ள புத்தா கிராமத்தில் பிரியா என்ற 5 வயது சிறுமி பிரசாதம் கொடுப்பதற்காக தயாராகி கொண்டு இருந்த கொதிக்கும் பருப்பு பாத்திரத்தில் தவறி விழுந்தாள். இதில் 80 சதவீதம் உடல் வெந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாள்.

    ஆனந்த சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்டுள்ள இந்த உயிரிழப்புகள் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளன.

    மகாராஷ்டிரா முழுவதும் அமைப்புகள் சார்பில் 55667 சிலைகளும், வீடுகளில் வைக்கப்பட்டிருந்த 1080499 சிலைகளும் கரைக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
    Next Story
    ×