search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கட்சி பலவீனமாக விடமாட்டேன் - முலாயம் சிங் உடன் இருப்பேன்: சகோதரர் சிவ்பால் யாதவ் பேட்டி
    X

    கட்சி பலவீனமாக விடமாட்டேன் - முலாயம் சிங் உடன் இருப்பேன்: சகோதரர் சிவ்பால் யாதவ் பேட்டி

    சமாஜ்வாடி கட்சி பலவீனமாக விடமாட்டேன் என்றும் தனது தலைவர் முலாயம் சிங்குடன் இருப்பதாகவும் அவரது சகோதரரும் அம்மாநில அமைச்சருமான சிவ்பால் யாதவ் தெரிவித்துள்ளார்.
    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி சார்பில், அதன் தேசிய தலைவர் முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் முதல்-மந்திரியாக பதவி வகித்து வருகிறார். இவரே மாநில கட்சித்தலைவராகவும் பதவி வகித்து வந்தார். இவரது மந்திரி சபையில் முலாயமின் தம்பியான சிவபால் சிங் நீர்வளம், நில மேம்பாடு உள்ளிட்ட முக்கிய துறைகளை கவனித்து வந்தார்.

    மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் நிலையில், குவாமி ஏக்தாதள கட்சியை சமாஜ்வாடியுடன் இணைக்க சிவபால் சிங் முயற்சி மேற்கொண்டார். இதற்கு அகிலேஷ் யாதவ் முட்டுக்கட்டை போட்டதால் இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது. தனது மந்திரி சபையில் சிவபால் சிங்கின் ஆதரவாளர்களாக இருந்த சில மந்திரிகளை அகிலேஷ் நீக்கினார்.

    இதனால் கோபமடைந்த முலாயம்சிங் யாதவ், மகன் அகிலேசிடம் இருந்த மாநிலத்தலைவர் பதவியை பறித்தார். மேலும் முதல்-மந்திரியாக தொடர்வதற்கு, எம்.எல்.ஏ.க்களை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறும் உத்தரவிட்டார். இதற்கு பதிலடியாக சிவபால் சிங்கிடம் இருந்த முக்கியமான துறைகள் அனைத்தையும் அகிலேஷ் பறித்துவிட்டு, சமூக நலத்துறையை வழங்கினார்.

    இந்த அதிரடி நடவடிக்கைகளால் சமாஜ்வாடி கட்சிக்குள் தந்தை-மகன் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இந்த மோதலை தணிப்பதற்காக, கட்சித்தலைவர் முலாயம்சிங் யாதவ், நேற்று டெல்லியில் இருந்து அவசரமாக லக்னோவுக்கு திரும்பினார்.

    தன் மகனான முதல்-மந்திரி அகிலேஷ் யாதவையும், தம்பி சிவபால்சிங் யாதவையும் தனித்தனியாக நேரில் அழைத்து பேசினார். ஆனால், அதில் சமரசம் ஏற்படவில்லை என்று தெரிகிறது.

    இதையடுத்து, சிவபால்சிங் யாதவ், தனது கேபினட் மந்திரி பதவியையும், மாநில சமாஜ்வாடி கட்சி தலைவர் பதவியையும் ராஜினாமா செய்வதாக கூறினார். இரண்டு ராஜினாமா கடிதங்களையும் முலாயம்சிங் யாதவிடம் சமர்ப்பித்தார்.

    அதுபோல், சிவபால்சிங் யாதவின் மனைவி சரளா, எடாவா மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை அளித்தார். அவருடைய மகன் ஆதித்யாவும் ஒரு கூட்டுறவு அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். ஆனால், இந்த ராஜினாமாக்களை முலாயம்சிங் ஏற்க மறுத்து விட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்நிலையில், சிவ்பால் யாதவ் ஆதரவாளர்கள் லக்னோவில் உள்ள அவரது வீட்டின் முன்பாக திரண்டனர். அப்போது சிவ்பால் யாதவிற்கு ஆதரவாக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.



    மேலும், அகிலேஷ் யாதவ் பதவி விலக வேண்டும் என்றும், முலாயம் சிங் முதல்-மந்திரியாக வேண்டும் என்றும் சிவ்பால் ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர்.

    ஆதரவாளர்கள் முன்பாக பேசிய அவர், ”நான் எங்கள் தலைவருடன்(முலாயம் சிங்) இருக்கிறேன். கட்சி பலவீனமாக விட மாட்டேன்” என்று தெரிவித்தார்.
    Next Story
    ×