search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீரை ஆக்கிரமித்துள்ள பகுதியில் இருந்து வெளியேறுங்கள்: பாகிஸ்தானுக்கு, இந்தியா எச்சரிக்கை
    X

    காஷ்மீரை ஆக்கிரமித்துள்ள பகுதியில் இருந்து வெளியேறுங்கள்: பாகிஸ்தானுக்கு, இந்தியா எச்சரிக்கை

    காஷ்மீரை ஆக்கிரமித்துள்ள பகுதியில் இருந்து வெளியேறுங்கள் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா முதன் முறையாக அதிகாரபூர்வமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
    புதுடெல்லி:

    காஷ்மீரில் ஒரு மாதத்துக்கும் மேலாக வன்முறை சம்பவங்கள் நீடித்து வருகிறது. எனவே காஷ்மீரில் அமைதி ஏற்படுத்த இந்தியா பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்று பாகிஸ்தான் வெளியுறவு துறை செயலாளர் அய்ஜாஸ் அகமது சவுத்ரி, இந்திய வெளியுறவு துறை செயலாளர் ஜெய்சங்கருக்கு அழைப்பு விடுத்தார். இதற்கு ஜெய்சங்கர், சவுத்ரிக்கு நேற்று முன்தினம் பதில் கடிதம் எழுதி உள்ளார்.

    இது குறித்து இந்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் சுவரூப் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    காஷ்மீர் பிரச்சினையில் தலையிட பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் கிடையாது. அது இந்தியாவின் ஒரு பகுதி. காஷ்மீரில் முறைகேடாக ஆக்கிரமித்துள்ள பகுதியில் இருந்து முதலில் பாகிஸ்தான் வெளியேறட்டும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தட்டும். அதன் பிறகு பேச்சுவார்த்தைக்கு எப்போது அழைத்தாலும் இந்தியா வர தயாராக இருக்கிறது.

    இந்தியாவுக்கு எதிராக வன்முறை, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானின் வரலாறு உலக நாடுகளுக்கு நன்றாக தெரியும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதும், காஷ்மீரை கைப்பற்றுவதும் தான் அவர்களின் நோக்கம். காஷ்மீரை இந்தியாவிடம் இருந்து கைப்பற்ற 1947, 1965, 1999 ஆகிய ஆண்டுகளில் பாகிஸ்தான் போர் தொடுத்தது இதற்கு உதாரணம் ஆகும். தற்போதும் காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தான் தலையீடு இருந்து கொண்டு தான் இருக்கிறது.

    இரு நாடுகளும் 1972-ம் ஆண்டு செய்து கொண்ட சிம்லா ஒப்பந்தம், 1999-ம் ஆண்டு நிறைவேற்றிய லாகூர் தீர்மானம் ஆகியவற்றின் மூலம் அமைதியை ஏற்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என்று ஜெய்சங்கர் தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் என 2004-ம் ஆண்டு பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் உறுதி கொடுத்ததையும் அந்நாட்டு வெளியுறவு துறை செயலாளருக்கு, ஜெய்சங்கர் நினைவுபடுத்தி இருக்கிறார்.

    எங்களின் கேள்விக்கு முறையாக பாகிஸ்தான் பதில் அளிக்க வேண்டும். இனி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுப்பதா?, பேச்சுவார்த்தையில் பங்கேற்பதா? என முடிவு எடுப்பது பாகிஸ்தான் கையில் தான் உள்ளது.

    இவ்வாறு விகாஷ் சுவரூப் கூறினார்.

    Next Story
    ×