search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உனா தலித் பேரணியை முடித்து வீடு திரும்பியவர்கள் மீது கல்வீச்சு தாக்குதல்: 19 பேருக்கு காயம்
    X

    உனா தலித் பேரணியை முடித்து வீடு திரும்பியவர்கள் மீது கல்வீச்சு தாக்குதல்: 19 பேருக்கு காயம்

    குஜராத் மாநிலத்தில் தலித் மக்கள் 10 ஆயிரம் பேர் கலந்து கொண்ட உனா பேரணியை முடித்து கொண்டு வீடு திரும்பியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் போலீசார் உட்பட 19 பேருக்கு காயம் ஏற்பட்டது.
    அகமதாபாத்:

    குஜராத்தின் உனா பகுதியில் பசுவதை செய்ததாக கூறி தலித்துகள் தாக்கப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அரசு அலுவலகங்களில் இறந்த மாட்டின் உடலை கொண்டு வந்து கொட்டி விட்டு போகும் அளவுக்கு எதிர்ப்புணர்வு வளர்ந்தது. இதையடுத்து, “ஜிக்னேஷ் மேவானி” என்கிற ஊடகவியலாளர் ஒருவரின் முன்னெடுப்பில் உனா நோக்கி பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

    இந்த பேரணிக்கு உனாவில் மட்டுமில்லாமல், குஜராத் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் பரவலாக ஆதரவு பெருகியது. இஸ்லாமியர்களும் பெரிய அளவில் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

    இந்தியாவின் சுதந்திர தினத்தன்று உனாவுக்கு சென்றடையும்படி திட்டமிடப்பட்ட பேரணி நேற்று உனாவை சென்றடைந்தது. இந்த பேரணியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அங்கு நடந்த நிகழ்வில், ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்து கொண்ட ரோஹித் வெமுலாவின் தாயார் இந்திய தேசிய கொடியை ஏற்றினார்.


    இதனிடையே, பேரணியை முடித்து வீடு திரும்பி கொண்டிருந்தவர்கள் மீதும், போலீசார் மீதும் மர்ம கும்பல் ஒன்று கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டது.

    நேற்று மாலை 5 மணியளவில் பேரணி நிறைவடைந்தது. பேரணி முடிந்ததும் சிலர் மோட்டார் சைக்கிளில் அருகில் உள்ள சம்டர் கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் 19 பேர் காயம் அடைந்துள்ளனர். இதனையடுத்து சம்டர் கிராமத்தை சேர்ந்த 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

    தாக்குதலில் இருந்து போலீசார் தங்களை பாதுகாக்க தவறிவிட்டதாக தலித் மக்கள் குற்றம்சாட்டினர். இருப்பினும் தாக்குதலில் 3 போலீசாரும் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.


    நேற்றைய பேரணியில் “கீழ்மட்டத்தில் உள்ள சாதியினருக்கு அரசு சார்பில் ஒதுக்கப்பட்டுள்ள நிலங்களை ஒரு மாதத்திற்குள் ஒப்படைக்க வேண்டும். எங்களது உரிமைகள் வழங்கப்படவில்லை என்றால் மாபெரும் போராட்டம் தொடங்குவோம்” என்று தலித் தலைவர்கள் கூறினர்.

    Next Story
    ×