என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாகன கட்டுப்பாடு எங்களுக்கு வேண்டாம் - கட்சி வேறுபாடு இன்றி அடம்பிடிக்கும் எம்.பி.க்கள்
    X

    வாகன கட்டுப்பாடு எங்களுக்கு வேண்டாம் - கட்சி வேறுபாடு இன்றி அடம்பிடிக்கும் எம்.பி.க்கள்

    டெல்லியில் அமல்படுத்தப்பட்டுள்ள வாகன கட்டுபாட்டு நடைமுறை தங்களுக்கு வேண்டாம் என்று எம்.பி.க்கள் கூறியுள்ளனர்.
    புதுடெல்லி:

    டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் வாகனங்களை ஒற்றைப்படை, இரட்டைப்படை பதிவு எண் அடிப்படையில் முறை வைத்து இயக்கும் நடவடிக்கையை மாநில அரசு மேற்கொண்டு உள்ளது. இந்த திட்டம் சோதனை அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் முதற்கட்டமாக அமல்படுத்தப்பட்ட நிலையில், 2–ம் கட்ட சோதனை 15 ஆம் தேதி தொடங்கியது. வருகிற 30–ந்தேதி வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும்.

    இந்த நாட்களில், ஒற்றைப்படை பதிவு எண் வாகனங்கள் ஒற்றைப்படை தேதிகளிலும், இரட்டைப்படை பதிவு எண் வாகனங்கள் இரட்டைப்படை தேதிகளிலும் இயக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை மீறுவோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படும் எனவும் அரசு அறிவித்து இருந்தது.

    இதற்கிடையே, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று துவங்கியுள்ளது. வாகன கட்டுப்பாடு அமலில் உள்ளதால், பாராளுமன்றத்திற்கு வருகை தரும் எம்.பி.க்கள் வசதிக்காக, டெல்லி அரசு பிரத்யேகமாக குளிர்சாதன வசதி கொண்ட பேருந்தை இயக்கியது. எம்.பி.க்களுக்கான இந்த சிறப்பு பேருந்து காலை 9 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் 8 மணி வரையும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி இன்று காலை இயக்கப்பட்ட இந்த பேருந்தில், ஒரு சில எம்.பி.க்கள் மட்டுமே பயணித்தனர். பாரதீய ஜனதா எம்.பி ரஞ்சன் பட் மற்றும் ஹரி ஓம் சிங் ஆகியோர் பாராளுமன்றத்திற்கு சிறப்பு பேருந்து மூலமாக பாராளுமன்றம் வந்தனர்.

    வாகன கட்டுப்பாட்டை மீறி பாரதீய ஜனதா எம்.பி பரேஷ் ராவல் தனது இரட்டைப்படை எண்கள் கொண்ட காரில் பாராளுமன்றம் வந்தார். இருப்பினும், விதியை மீறியதற்காக அரவிந்த் கெஜ்ரிவாலிடம் பரேஷ் ராவல் மன்னிப்பு கோரினார். வாகன கட்டுப்பாட்டை மீறியதற்காக அபராதம் செலுத்திவிட்டு அதற்கான செலுத்துச்சீட்டையும் டுவிட்டரில் பதிவு செய்து இருந்தார். பேருந்துகள் பற்றிய விபரங்களை எம்.பி.க்கள் தெரிந்து கொள்வதற்கு வசதியாக பாராளுமன்ற வளாகத்தில் சிறப்பு உதவி மையமும் அமைக்கப்பட்டு இருந்தது. எம்.பி.க்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பேருந்துகளில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    ஆனால் பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் போது மட்டும் வாகன கட்டுப்பாட்டில் இருந்து எங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் மக்களவையில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி. குலாம் நபி ஆசாத் இதே கருத்தை முன்வைத்தார். இதனை அடுத்து பேசிய மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி, “இந்த விவகாரம் குறித்து உரிய அதிகாரிகளிடம் பேசி தீர்வு காண ஏற்பாடு செய்யப்படும்” என்று தெரிவித்தார். ஆனால் சில எம்.பி.க்கள் சைக்கிளில் பாராளுமன்றம் வந்து அசத்தினார்கள்.

    வாகன கட்டுப்பாட்டு திட்டத்தில் இருந்து, ஜனாதிபதி, பிரதமர், துணை ஜனாதிபதி, மத்திய மந்திரிகள், தலைமை நீதிபதி, உயர் நீதிமன்ற நீதிபதிகள், பெண்கள் ஆகியோருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், எம்.பி.க்களுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை.
    Next Story
    ×