என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: பிரதமர் மோடி யோசனை
    X

    பாராளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: பிரதமர் மோடி யோசனை

    பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி யோசனை தெரிவித்து உள்ளார்.
    புதுடெல்லி:

    மாநில முதல்-மந்திரிகள் மற்றும் ஐகோர்ட்டுகளின் தலைமை நீதிபதிகள் கலந்து கொள்ளும் ஒருங்கிணைந்த மாநாடு டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் நடந்தது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தொடக்க உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நமது நாடு மிகப்பெரியது. இங்கு ஒரே நேரத்தில் பல தேர்தல்கள் நடக்கிறது. இதனால் எங்காவது அடிக்கடி தேர்தல் நடத்தை விதிகள் இருந்து கொண்டே இருக்கிறது. இது அரசின் வளர்ச்சி திட்டங்கள் மக்களை சென்றடைவதை பாதிக்கிறது.

    எனவே இந்த பிரச்சினையில் இருந்து விடுபட பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும். இதற்கான ஒரு வழியை நாம் கண்டிப்பாக கண்டுபிடிக்க வேண்டும்.

    நீதித்துறையில் நிறைய சட்டங்கள் இருக்கின்றன. இது மிகுந்த சுமையாக உள்ளது. இதன் எண்ணிக்கையை குறைப்பது மிகப்பெரும் சவாலாக விளங்குகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவினர், குறைந்தது 1500 சட்டங்களாவது காலாவதியாகி இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர்.

    இந்த சட்டங்கள் விரைவில் அகற்றப்படும் என நம்புகிறேன். சில சட்டங்கள் ஏற்கனவே அகற்றப்பட்டு விட்டன. இதில் அரசும், நீதித்துறையும் இணைந்து வெற்றி காண்பார்கள் என உறுதி கூறுகிறேன். இதில் நாம் வெற்றி பெறுவோமோ இல்லையோ அது வேறு விஷயம். ஆனால் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். நீங்கள் எங்களுடன் ஒத்துழைத்தால், நாம் அதற்கான வழிகளை காணலாம்.

    சில நாட்களுக்கு முன் இது போன்ற ஒரு மாநாட்டில் நான் பேசும்போது, கோர்ட்டுகளின் பணி நேரத்தை அதிகரிக்க வேண்டும் எனவும், நீதிபதிகள் அதிகமாக உழைக்க வேண்டும் எனவும் யோசனை கூறினேன்.

    அந்த மாநாடு முடிந்ததும் நீதிபதிகள் எல்லோரும் என்மீது ஆத்திரம் கொண்டனர். நீங்கள் உங்களைப்பற்றி என்ன நினைத்து கொண்டிருக்கிறீர்கள்? என்று கோபமடைந்தனர். இதனால் பயந்து போன நான், அதன் பிறகு ஒரு வார்த்தை கூட பேசவில்லை. (இதை கேட்டதும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நீதிபதிகள் மற்றும் அரங்கில் இருந்தவர்கள் பலமாக சிரித்தனர்)

    சாதாரண மனிதர்கள் நீதித்துறை மீது இன்னும் அதிகமாக நம்பிக்கை வைத்துள்ளார்கள். இந்த நம்பிக்கையை நாம் தொடர்ந்து காப்பாற்ற வேண்டும். சரியான நேரத்தில் நீதி வழங்குவதில் அரசுக்கான கடமைகள் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
    Next Story
    ×