என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏர்வாடியில் சந்தனக்கூடுவுக்கு ஆயிரக்கணக்கானோர் மலர்கள் தூவி வரவேற்பு
    X

    ஏர்வாடியில் சந்தனக்கூடுவுக்கு ஆயிரக்கணக்கானோர் மலர்கள் தூவி வரவேற்பு

    ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில் 842-வது தேசிய ஒருமைப்பாட்டு சந்தனக்கூடு ஊர்வலம் இன்று அதிகாலை நடந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் வழி நெடுகிலும் சந்தனக் கூடுவுக்கு மலர் தூவி வரவேற்பு கொடுத்தனர்.
    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள பாதுஷா நாயகம் தர்காவில் கடந்த மாதம் ஆகஸ்டு 4-ந்தேதி மவுலுது (புகழ் மாலை) ஓதப்பட்டு சந்தனக் கூடு விழா துவங்கியது. நேற்று மாலை 5 மணிக்கு யானை மற்றும் குதிரை ஊர்வலத்துடன் சென்று தர்காவில் போர்வை எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து சந்தனம் கரைக்கும் நிகழ்ச்சி நல்ல இபுறாகிம் மஹாலில் நடந்தது.

    ஏர்வாடி சந்தனக்கூடு உருவாக்குவதில் அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்பதால் ஆண்டுதோறும் மதநல்லிணக்க விழாவாக கொண்டாடி வருகின்றனர். யாதவர் மற்றும் முத்தரையர் சமூகத்தினர் சந்தனக் கூட்டை இழுத்து வந்தனர். ஊர்வலத்தில் ஆதி திராவிட சமூகத்தினர் புத்தாடை அணிந்து, தீப்பந்தங்களை பிடித்தும், பிறைக் கொடி ஏந்தி, பெண்கள் வழி நெடுகிலும் குலவையிட்டு வந்தனர்.

    காலை ஐந்து மணிக்கு மின் விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு தர்கா வளாகத்தை வந்தடைந்தது. தர்கா வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மலர்களை தூவி வரவேற்றனர்.

    தர்கா ஹக்தார்கள் பாதுஷா நாயகம் அடக்க ஸ்தலத்தில் சந்தனம் பூசி, போர்வையை போர்த்தினர். அதன் பின் பக்தர்களுக்கு சந்தனம் வழங்கினர்.

    வரும் செப்.3-ந்தேதி கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. நேற்று இரவு மாவட்ட கலெக்டர் நடராஜன் தர்காவிற்கு வந்து பாதுஷா நாயகம் அடக்கஸ்தலத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்தார். விழா ஏற்பாடுகளை கோர்ட் கமிசனர் செய்தார்.

    Next Story
    ×