search icon
என் மலர்tooltip icon

    உண்மை எது

    மின்கட்டணம் செலுத்தாவிட்டால் மின்சாரம் துண்டிக்கப்படும்- மொபைல் எண்களுக்கு வரும் போலி தகவல்
    X

    மின்கட்டணம் செலுத்தாவிட்டால் மின்சாரம் துண்டிக்கப்படும்- மொபைல் எண்களுக்கு வரும் போலி தகவல்

    • மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது
    • இதுபோன்ற குறுந்தகவல்களை மின் பகிர்மான கழகம் அனுப்புவதில்லை என்று கூறி உள்ளது

    மின் கட்டணம் செலுத்த தவறுவோரின் வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்படும் என்று, கடந்த சில மாதங்களாக போலியான தகவல் பரவி வருகிறது. மக்களின் செல்போன்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாகவும், வாட்ஸ் அப் மூலமாகவும் இந்த தகவல் வலம் வருகிறது.

    'வாடிக்கையாளர்கள் தங்களது கடந்த மாத மின் துறை கட்டணத்தை கட்ட தவறினால், இன்று இரவு 8.30 மணியளவில் உங்களது மின் இணைப்பு துண்டிக்கப்படும்' என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மின்சார வாரியங்கள் அல்லது மின்விநியோகஸ்தர்கள் ஒரு குறிப்பிட்ட மாதத்திற்கான மொத்த மின்கட்டணத் தொகை மற்றும் நிலுவைத் தேதி குறித்து எஸ்எம்எஸ் அல்லது வாட்ஸ்அப் மெசேஜ் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது தெரிவிக்கின்றனர். இதே பாணியில் இந்த போலி செய்தியும் உள்ளது. இதனால் பலர் உண்மையென நம்பி ஏமாந்துவிடுகின்றனர்.

    தற்போது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக அரசு காலக்கெடு விதித்துள்ள நிலையில், இந்த தகவல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஆனால், இந்த தகவல் போலி எனவும், இந்த குறுந்தகவலை பயனாளர்கள் நம்ப வேண்டாம் எனவும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. இதுபோன்ற குறுந்தகவல்களை மின் பகிர்மான கழகம் அனுப்புவதில்லை என்றும் தெளிவுபடுத்தி உள்ளது.

    மின் துறை சார்பில் ஏதேனினும் ஊழியர் தொலைபேசி மூலமாகவோ அல்லது வாட்ஸ்ஆபில் மூலமாகவோ அணுகினால் அதை நம்ப வேண்டாம் எனவும் மின் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு வரும் மெசேஜ் மற்றும் வாட்ஸ்அப் தகவலுக்கு பதில் அனுப்பினால், மோசடியாளர்கள் உங்களது வங்கிக் கணக்கு விவரங்களை அறிந்துகொண்டு, பணத்தை திருடிவிடுவார்கள் என்பதால் எச்சரிக்கையாக இருக்கும்படி சென்னை கமிஷனர் அலுவலகம் ஏற்கனவே அறிவுறுத்தல்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×