என் மலர்
உள்ளூர் செய்திகள்

வடசென்னை அனல்மின் ஊழியரை கத்தியால் வெட்டி செல்போன் பறிப்பு- வாலிபர் கைது
- லாரி டிரைவரான நாமக்கல்லைச் சேர்ந்த பிரபாகரனிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 5 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.
- மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரி:
மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசன். இவர் வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் நேற்று இரவு வேலை முடித்து விட்டு மீஞ்சூர் அடுத்த அரியன்வாயல் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அன்பரசனை கத்தியால் வெட்டி செல்போன் பறித்து சென்றனர்.
இதே போல் அதே கும்பல் மீஞ்சூர் வண்டலூர் சாலை ஓரத்தில் நிறுத்தி இருந்த லாரி டிரைவரான நாமக்கல்லைச் சேர்ந்த பிரபாகரனிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 5 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து உடனடியாக மீஞ்சூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அங்கு விரைந்து வந்ததும் கொள்ளையர்கள் மோட்டார்சைக்கிளை போட்டு விட்டு வயல் வெளிகளில் தப்பி ஓடினர்.
அவர்களில் மீஞ்சூர் காலனி பகுதியைச் சேர்ந்த பிரதாப் என்கிற ஆகாஷ் (19) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். கைது செய்த பிரதாப்பிடமிருந்து செல்போன், ரூ.5 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






