search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேங்கிய தண்ணீரை தொழிலாளி வெறும் கையால் அகற்றிய விவகாரம்-  எபினேசர் எம்.எல்.ஏ. விளக்கம்
    X

    தேங்கிய தண்ணீரை தொழிலாளி வெறும் கையால் அகற்றிய விவகாரம்- எபினேசர் எம்.எல்.ஏ. விளக்கம்

    • குடிநீர் வழங்கல் துறை உதவி பொறியாளரிடம் சிறிய பிரச்சினையைகூட சரி செய்யமாட்டீர்களா என்று கேட்டேன்.
    • திமுக மீதுள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இந்த புனைவு கதைகளுடன் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    ராயபுரம்:

    ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. எபினேசர். இவர் 'உங்களைத்தேடி தினந்தோறும் உங்கள் எம்.எல்.ஏ.' என்ற திட்டத்தை கடந்த 31-ந்தேதி தொடங்கி பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகிறார். தொகுதி முழுவதும் அனைத்து வார்டுகளுக்கும் செல்ல திட்டமிட்டு இருக்கிறார்.

    கடந்த 31-ந்தேதி தண்டையார்பேட்டையில் உள்ள தண்டையார்நகர் பகுதியில் பொதுமக்களிடம் குறைகளை எபினேசர் எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள குடிநீர் கைப்பம்பு அருகே தண்ணீர் தேங்கி நின்றது.

    இதுகுறித்து அதிகாரிகளிடம் எபினேசர் எம்.எல்.ஏ. விளக்கம் கேட்டார். அப்போது அங்கிருந்த துப்புரவு ஊழியர் ஒருவர் உடனடியாக தேங்கிய தண்ணீரை வெறும் கையால் அகற்றி வெளியேற்றினார்.

    இந்நிலையில் துப்புரவு ஊழியர் பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் வெறும் கையால் கழிவுநீரை அகற்றியதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது. இது சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக எபினேசர் எம்.எல்.ஏ. தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள விளக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    டிசம்பர் 31-ந் தேதி தண்டையார் நகரில் ஆய்வு மேற்கொண்டிருந்த போது ஒரு குடிநீர் கைபம்பிற்கு கீழ் தண்ணீர் தேங்கி நிற்பதாக தெரிவித்தனர்.

    அந்த தண்ணீர் தேங்கி நிற்கும் இடத்தில் உபரியாக வரும் குடிநீர் 4 இன்ச் விட்டம் கொண்ட கல்லியின் வழியாக அருகில் இருக்கும் மழைநீர்சேமிப்பு அமைப்பிற்கு சென்றடையும்.

    அந்த 4 இன்ச் விட்டம் கொண்ட கல்லியில் மண், மர இலைகள் இருந்ததால் மழைநீர்சேமிப்பு அமைப்பிற்கு செல்லாமல் அடைத்து கொண்டிருந்தது.

    குடிநீர் வழங்கல் துறை உதவி பொறியாளரிடம் இந்த சிறிய பிரச்சினையைகூட சரி செய்யமாட்டீர்களா என்று கேட்டேன். உடனே அங்கிருந்த துப்புரவு பணியாளர் ஒருவர் அந்த உபரியான குடிதண்ணீர் தேங்கி நிற்கும் கல்லியில் அடைத்து கொண்டிருந்த மண், மர இலைகளை எடுத்துவிட்டு இந்த சிறிய விஷயத்தை இங்கு குடித்தண்ணீர் பிடிப்பவர்களே செய்திருக்கலாமே என்று சொன்னார். அதுவும் நான் அவர் செய்ததை கவனிக்கவில்லை.

    பின்னால் திரும்பி 7-வது தெருவில் வந்த புகார்கள் சம்பந்தமாக பேசி கொண்டிருந்தேன். எம்.எல்.ஏ.க்களையே கண்டிராத ஆர்.கே.நகர் மக்களிடையே 'உங்களைத்தேடி தினந்தோறும் உங்கள் எம்.எல்.ஏ.' திட்டம் நல்ல வரவேற்பு கிடைத்ததை தாங்க முடியாத சிலர் வீடியோவை வெட்டி ஒட்டி பொய் பிரசாரம் செய்கின்றனர். திமுகவின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இந்த புனைவு கதைகளுடன் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×