என் மலர்
உள்ளூர் செய்திகள்

கணவரின் கோபத்தால் விபரீதம்- குழந்தையுடன் மனைவி மாயம்
- அய்யனார் அடிக்கடி மனைவியிடம் கோபப்படுவதாக தெரிகிறது.
- அய்யனார் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
சேலம்:
சேலம் பழைய சூரமங்கலம் வன்னிய கவுண்டர் தெருவை சேர்ந்தவர் அய்யனார். இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கலை அரசி (வயது 24). இந்த தம்பதிக்கு திருமணம் நடந்து 4 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு பிரபாஸ் என்ற ஆண் குழந்தை உள்ளது.
அய்யனார் அடிக்கடி மனைவியிடம் கோபப்படுவதாக தெரிகிறது. அது போல் கடந்த 24-ந்தேதி காலையில் அவர், மனைவியிடம் கோபத்தில் சத்தம் போட்டுவிட்டு வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டு சென்றார். கணவர் தன்னிடம் கோபப்படுவதால் கலை அரசி மனமுடைந்தார். இனிமேல் கணவருடன் வாழ்வதை விட, அவரைவிட்டு பிரிவதே மேல் என முடிவு செய்து அன்று மதியம் 1 மணி அளவில் மகன் பிரபாஸை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு கலைஅரசி சென்று விட்டார்.
அய்யனார் மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் மனைவியும், குழந்தையும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கம் உள்ள வீடுகள், பல்வேறு இடங்களில் தேடியும் இருவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இருவரும் இதுவரையிலும் வீடு திரும்பவில்லை. எங்கு சென்றார்கள்? என்ன ஆனார்கள் என எதுவும் தெரியவில்லை.
இதுகுறித்து அய்யனார் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கலை அரசி பயன்படுத்தி வந்த செல்போன் எண்ணுக்கு கடைசியாக வந்த அழைப்புகள், மற்றும் அக்கம், பக்கத்தில் யார்? யாரிடம்? பேசினார் போன்ற விபரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.






