என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிரசவத்தில் குழந்தையுடன் பெண் பலி : அரசு ஆஸ்பத்திரி செவிலியர்கள் சஸ்பெண்டு
- மருத்துவர்கள் இல்லாததால் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கொடுக்க மல்லிகாவின் உறவினர்கள் கேட்டுள்ளனர்.
- 2 மருத்துவர்களை வேறு இடத்திற்கு மாறுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வரா யன்மலை கீரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் மனைவி மல்லிகா (வயது 26). கர்ப்பிணியான இவருக்கு கடந்த 19-ந்தேதி நள்ளிரவில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. மல்லிகாவின் உறவினர்கள் சோரப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் இல்லாததால் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கொடுக்க மல்லிகாவின் உறவினர்கள் கேட்டுள்ளனர். 108 ஆம்புலன்ஸ் வருவதற்குள் மல்லிகாவிற்கு பிரசவ வலி அதிகமானது. உடனடியாக பணியில் இருந்து செவிலியர்கள் சஞ்சம்மாள், ராதிகா ஆகியோர் பிரசவம் பார்ததுள்ளனர். இதில் பெண் குழந்தை பிறந்து சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டது. இதையடுத்து மல்லிகாவும் இறந்துவிட்டார்.
இத்தகவல் கீரப்பள்ளி கிராம மக்களிடம் பரவியதை அடுத்து சோரப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு 100-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். அங்கிருந்த மல்லிகாவின் உறவினர்களுடன் சேர்ந்து அரசு ஆஸ்பத்திரிக்கு எதிரில் நேற்று அதிகாலை சாலைமறியல் ஈடுபட்டனர். இதனால் சங்கராபுரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த கோட்டாட்சியர் பவித்ரா, போலீஸ் உதவி சுப்பிரண்டு ரமேஷ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கீரப்பள்ளி கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அந்த மக்களின் கோரிக்கையை ஏற்ற அதிகாரிகள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வழங்கினர்.
மேலும், பணியில் இல்லாத 2 மருத்துவர்களை வேறு இடத்திற்கு மாறுதல் செய்தனர். பணியில் இருந்து பிரசவம் பார்த்த செவிலியர்கள் சஞ்சம்மாள், ராதிகா ஆகியோரை சஸ்பெண்ட் செய்தனர். உடனடியாக வேறு 2 செவிலியர்களை சுகாதாரத் துறை இணை இயக்குனர் ராஜா நியமனம் செய்தார். இதையடுத்து சாலை மறியலை கீரப்பள்ளி கிராம மக்கள் கைவிட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கச்சிராயப்பாளையம் போலீசார் இறந்து போன தாய் மற்றும் பச்சிளங் குழந்தையின் உடலை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.






