search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    100 டிகிரிக்கு மேல் கடும் வெயில்: கடலூர் மாவட்டத்தில் அனல் காற்று வீச காரணம் என்ன? வானிலையாளர் பாலமுருகன் பேட்டி
    X

    100 டிகிரிக்கு மேல் கடும் வெயில்: கடலூர் மாவட்டத்தில் அனல் காற்று வீச காரணம் என்ன? வானிலையாளர் பாலமுருகன் பேட்டி

    • திடீர் மழை காரணமாக ஒரு கடலூர் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் தாக்கம் குறைந்தது.
    • ஈரப்பதற்காற்று உள்ளே வரும் சமயத்தில் அனல் காற்று கணிசமாக குறைந்து காணப்படும்.

    கடலூர்:

    தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் தொடங்கி நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென்று கடலூர் மாவட்டத்தில் மிக கனமழை பெய்தது. திடீர் மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் தாக்கம் குறைந்தது. இதனால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்து வந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் 101 டிகிரி வெயில் அளவு பதிவானதும் குறிப்பிடத் தக்கதாகும். தற்போது தமிழகத்தில் சென்னை, கடலூர், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக 100 டிகிரி வெயில் அளவு பதிவாகி வருவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இது மட்டுமின்றி கடந்த மே 4-ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் வழக்கத்தை விட அதிக அளவில் சுட்டெரிக்கும் வெயில் தாக்கி கடும் அனல் காற்று வீசி வந்தது. இதனால் கடலூர் மாவட்டத்தில் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்களின் நடமாட்டம் குறைந்த வண்ணம் இருந்து வந்தது. மேலும் கடலூரில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    கடும் வெயில் மற்றும் அனல் காற்று வீசுவதால் சாலை ஓரங்களில் உள்ள பழச்சாறு, இளநீர், கரும்பு ஜூஸ் மற்றும் குளிர்பானங்கள் போன்றவற்றை பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அருந்தி வெயிலின் தாக்கத்தை குறைக்க முயன்றாலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் கடும் வெயில் காரணமாக முகத்தில் துணி கட்டிக் கொண்டும், குடைப்பிடித்த படியும் சென்றதையும் காணமுடிந்தது.

    இந்த நிலையில் மாலை வரை சுட்டெரிக்கும் வெயில் இருந்து வரும் நிலையில் இரவு நேரங்களில் கடுமையான புழுக்கத்தை ஏற்படுத்தும் காரணத்தினால் பொதுமக்கள் இரவு தூக்கம் இல்லாமல் கடும் அவதி அடைந்து வருவதோடு முதியவர்களுக்கு பல்வேறு உடல்நிலை பாதிப்பும் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் வெயில் மற்றும் அனல் காற்று அதிகரித்து வரும் காரணங்கள் குறித்து வானிலையாளர் பாலமுருகனிடம் கேட்ட போது கூறியதாவது:-

    தமிழகத்தில் கடந்த 2 மாதமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து தற்போது சுட்டெரிக்கும் வெயில் மற்றும் அனல் காற்று வீசி வருகின்றது. மேலும் கடந்த 4-ந்தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ள நிலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததை காண முடிந்தது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு மோக்கா புயல் உருவாகி மியான்மரில் கரையை கடந்தது. இதன் காரணமாக காற்றில் உள்ள ஈரப்பதம் பெருமளவில் குறைந்து தற்போது மிக குறைந்த அளவில் ஈரப்பதற்காற்று கடல் பகுதியில் வீசி வருகின்றது. மேலும் மேற்கு திசையில் இருந்து காற்று தீவிரமாக வீசி வருகின்றது. இந்த காற்றானது வறண்ட காற்றாகும். இந்த காற்று வங்க கடலில் இருந்து வீசும் நேரத்தில் எப்போதும் மதியம் ஒரு மணி முதல் 2 மணி வரை கிழக்கு திசையில் இருந்து ஈரப்பதற்காற்று உள்ளே வரும் சமயத்தில் அனல் காற்று கணிசமாக குறைந்து காணப்படும்.

    ஆனால் தற்போது மேற்கு திசையிலிருந்து வரக்கூடிய காற்று அதி கரித்து வரும் நிலையில் கிழக்கிலிருந்து வரக்கூடிய ஈரப்பதற்காற்று சற்று காலதாமதமாக வருவதால் வெப்ப சலனம் அதிகரித்து அனல் காற்று கடுமையாக வீசி வருகின்றது. ஆனால் நேற்று கிழக்கில் இருந்து வரக்கூடிய ஈரப்பதற்காற்று சரியான நேரத்தில் உள்ளே வந்ததால் நேற்று முன்தினம் 104 டிகிரி வெயில் இருந்த நிலையில் நேற்று 100 டிகிரி வெயிலாக குறைந்து காணப்பட்டது. இன்று முதல் 3நாட்களுக்கு வறண்ட வானிலை மற்றும் அனல் காற்று வீசக்கூடிய நிலையில் தான் தற்போது வரை உள்ளது. இதன் பிறகு வானிலை மாற்றம் காரணமாக எதுவாயினும் நடை பெறலாம். ஆகையால் பொது மக்கள் மற்றும் முதியவர்கள் அனல் காற்று மற்றும் சுட்டெ ரிக்கும் வெயில் காரணமாக பாதுகாப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×