search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுத்தை நடமாட்டம்- இரவு முழுவதும் பீதியில் தவித்த வெள்ளக்கோவில் கிராம மக்கள்
    X

    சிறுத்தை நடமாட்டம்- இரவு முழுவதும் பீதியில் தவித்த வெள்ளக்கோவில் கிராம மக்கள்

    • காங்கயம் வனத்துறை ரேஞ்சர் தனபால் கூறுகையில், சிறுத்தை நடமாட்டம் உள்ளதற்கான அறிகுறி தென்படவில்லை.
    • இளைஞர்கள் சிலர் தூங்காமல் வனத்துறையினருடன் சேர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    வெள்ளக்கோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே உள்ள குருக்கத்தி பகுதி கரூா் மாவட்ட எல்லையாக உள்ளது. இங்கிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள கரூா் மாவட்டம் தென்னிலை சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை நடமாடுவதாகவும், அது ஆடுகள், நாய்களை கடித்து குதறி வருவதாகவும் தகவல் பரவியது.

    இந்தநிலையில் வெள்ளக்கோவிலை அடுத்த குருக்கத்தி, இலுப்பைக்கிணறு, கல்லமடை, கெங்கநாயக்கன்வலசு, ஒத்தக்கடை, கே.வி. பழனிசாமி நகா், நாட்டராய சுவாமி கோவில் பகுதிகளில் சிறுத்தை சுற்றி திரிவதாகவும் அதை பாா்த்ததாகவும் தகவல்கள் பரவியதால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

    சமூக வலைதளங்களில் வேறு பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி பரவி வருகிறது. இதுகுறித்து காங்கயம் வனத்துறை, வெள்ளக்கோவில் போலீசார், தீயணைப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உறுதிப்படுத்தப்படவில்லை. வதந்தியைப் புறந்தள்ளாமல் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனா்.

    இந்நிலையில் வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குருக்கத்தி அருகில் உள்ள ஒரு நூற்பாலை கேமராவில் ஒரு மா்ம விலங்கு செல்வது பதிவாகி உள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு ள்ளது.

    காங்கயம் வனச்சரக அலுவலா் தனபால் தலைமையிலான குழுவினா் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்படும் குருக்கத்தி, கள்ளமடை, ஒத்தக்கடை, நாட்டராய சுவாமி கோவில் பகுதிகளில் ரோந்து மேற்கொண்டு சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர். சி.சி.டி.வி. கேமரா பொருத்தி கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கரூர் பகுதியில் சுற்றி திரிந்த சிறுத்தை வெள்ளக்கோவில் பகுதியில் வந்திருக்கலாம் என பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

    காங்கயம் வனத்துறை ரேஞ்சர் தனபால் கூறுகையில், சிறுத்தை நடமாட்டம் உள்ளதற்கான அறிகுறி தென்படவில்லை. இருப்பினும் சில கால்தடங்களை எடுத்துள்ளோம். அவை நாயா, சிறுத்தையா என்பது ஆய்வுக்கு பின் உறுதி செய்யப்படும். தொடர்ந்து இரவு முழுவதும் கண்காணித்து வருகிறோம் என்றார்.

    சிறுத்தை நடமாட்டம் பீதியால் வெள்ளக்கோவிலை அடுத்த குருக்கத்தி, இலுப்பைக்கிணறு உள்ளிட்ட கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்றிரவு முழுவதும் அச்சத்தில் தவித்தனர். இளைஞர்கள் சிலர் தூங்காமல் வனத்துறையினருடன் சேர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×