என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்டம்
    X

    நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்டம்

    • நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயிலை நாளை மறுநாள் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
    • மொத்தம் 8 பெட்டிகள் கொண்ட இந்த ரெயிலில் நடுப்பகுதியில் வி.ஐ.பி.களுக்கான பெட்டி 1 உள்ளது.

    நெல்லை:

    தென்னக ரெயில்வேயில் அதிக வருவாயை கொட்டி கொடுக்கும் ரெயில் நிலையமாக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் உள்ளது.

    இதனால் வடமாநிலங்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலை தமிழகத்தில் சென்னை-கோவை, சென்னை-மைசூரு உள்ளிட்ட வழித்தடங்களுக்கு அடுத்தபடியாக நெல்லை-சென்னை இடையே இயக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பும் வெளியானது.

    அதற்கான ஏற்பாடுகள் முடிவடைந்த நிலையில், நேற்று சென்னையில் தயார் நிலையில் இருந்த அந்த ரெயில் நெல்லைக்கு எடுத்து வரப்பட்டது. இதனை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில் இந்த ரெயிலுக்கான சோதனை ஓட்டம் இன்று காலை தொடங்கியது. காலை 6 மணிக்கு வந்தே பாரத் ரெயில் 8 பெட்டிகளுடன் சென்னைக்கு புறப்பட்டது. இந்த ரெயில் 7.05 மணிக்கு விருதுநகர் சென்றடைந்தது.

    பின்னர் அங்கிருந்து மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று சென்று மதியம் சென்னை எழும்பூரை அடைந்தது. தொடர்ந்து மதியம் 2.50 மணிக்கு இந்த ரெயில் சென்னையில் இருந்து மறுமார்க்கமாக நெல்லைக்கு புறப்பட்டு வர உள்ளது.

    மொத்தம் 8 பெட்டிகள் கொண்ட இந்த ரெயிலில் நடுப்பகுதியில் வி.ஐ.பி.களுக்கான பெட்டி 1 உள்ளது. இதில் 52 பயணிகள் அமர்ந்து செல்லலாம். இருபுறமும் தலா 2 இருக்கைகள் கொண்டதாக இந்த பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு இருக்கைக்கும் கீழ் பகுதியில் சார்ஜர் பாயிண்ட் உள்ளது. இந்த இருக்கைகள் சுழலும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் இருக்கையில் அமர்ந்தபடி உணவு உண்ண வசதி உள்ளது. இந்த பெட்டியில் உட்புறத்தில் 2 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. கதவு பகுதியில் 2 கேமராக்கள் உள்ளன. மொத்தம் உள்ள 8 பெட்டிகளும் முழுமையாக குளிர்சாதன வசதி கொண்டவையாக அமைக்கப்பட்டுள்ளது. மற்ற 7 சாதாரண பெட்டிகளிலும் ஒரு புறத்தில் 3 இருக்கைகள், மற்றொரு புறத்தில் 2 இருக்கைகள் உள்ளன. இவை சுழலாது. இந்த பெட்டிகளிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சாப்பிட வசதி, சார்ஜ் செய்யும் வசதி உள்ளது.

    மேலும் நவீன வசதிகள் கொண்ட கழிப்பிட வசதி உள்ளது. குழந்தைகளுடன் செல்பவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கும் கழிவறையில் சிறப்பு வசதி உள்ளது. இந்த ரெயிலில் சுமார் 540 பயணிகள் வரை பயணம் செய்யலாம். 5 நிமிடத்திற்கு முன்னதாகவே பயணிகள் ரெயிலில் ஏறிவிட வேண்டும்.

    கடைசி நேரத்தில் வரும் பயணிகள் முதல் அல்லது கடைசி பெட்டி வாசல் வழியாக மட்டுமே ஏற முடியும். மற்ற வாசல்களில் முழுமையாக சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. எனவே வாசல் படிக்கட்டில் நின்றால் ரெயில் புறப்பட முடியாது என்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த ரெயிலில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு, டிக்கெட் கட்டணம் குறித்து இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை. இன்று இரவுக்குள் முன்பதிவு, உணவு, டிக்கெட் குறித்த முழு விபரம் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

    வந்தே பாரத் ரெயில் தொடக்க விழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) சந்திப்பு ரெயில் நிலையத்தில் நடக்கிறது. டெல்லியில் இருந்து காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி இந்த ரெயிலை தொடங்கி வைக்கிறார். மதியம் 12 மணிக்கு நடக்கும் இந்த தொடக்க விழாவில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொள்கிறார்.

    இந்த விழாவில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், ஞானதிரவியம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், நயினார் நாகேந்திரன், மேயர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை ரெயில் நிலைய மேலாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×