என் மலர்
உள்ளூர் செய்திகள்

நோய் மற்றும் மருந்தின்றி வாழ கற்றுக்கொள்ள வேண்டும்-மருத்துவர் தினத்தில் சித்தா டாக்டர் அறிவுரை
- நோய், மருந்தின்றி ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர் தினத்தில் சித்த மருத்துவர் டாக்டர் காமராஜ் அறிவுரை வழங்கினார்
- உணவு, உடற்பயிற்சி, மனநிம்மதி, ஓய்வு, உறக்கம் இவைகளை ஆரம்ப நிலையிலிருந்தே அதாவது குழந்தை வயதிலிருந்தே யார் ஒருவர் சரியாக கடைபிடிக்கின்றாரோ அவர்களுக்கு உடல் நோய் ஏற்படுவதில்லை
திருச்சி:
சர்வதேச மருத்துவர் தினத்தையொட்டி, திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உலகில் பிறந்த அனைவருக்கும் இருக்கும் ஆசை அழகாக இருக்க வேண்டும், நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும் என்பது தான். குழந்தைகளிலிருந்து முதியவர்கள் வரை இதை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. இது சாத்தியமா என்று கேட்டால் சாத்தியம்தான்.
வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பது பழமொழி. உண்மைதான், இன்றைக்கு பல பேரிடம் இது தொலைந்து போய் விட்டது. நம் மனது மகிழ்ச்சியாக இருந்தாலே உடலில் உள்ள அணுக்களும் ஆரோக்கியமாக இருக்கும்.
மனக்கவலை, மன அழுத்தம், மன உளைச்சலே அனைத்து நோய்களுக்கும் முதல் காரணம். இது இல்லாமல் இருப்பதும் இதை தவிர்ப்பதுமே நாம் நலமாக வாழ உதவும்.
உணவு, உடற்பயிற்சி, மனநிம்மதி, ஓய்வு, உறக்கம் இவைகளை ஆரம்ப நிலையிலிருந்தே அதாவது குழந்தை வயதிலிருந்தே யார் ஒருவர் சரியாக கடைபிடிக்கின்றாரோ அவர்களுக்கு உடல் நோய் ஏற்படுவதில்லை. நோயின்றி வாழ வேண்டும், மருந்து இல்லாமல் வாழ வேண்டும், நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். இதுவே அனைவரின் தாரக மந்திரமாக இருக்க வேண்டும்.
நம் உடலின் ஆரோக்கியம் நம் கையில் தான் இருக்கிறது. மருத்துவமனைக்கு போனாலும் மருந்துகள் சாப்பிட்டாலும் நோயில்லாமல் இருக்க முடியாது. சமையல் அறை தான் மருத்துவமனை, நம்வீட்டு பெண்கள்தான் மருத்துவர்கள்ம், வீட்டு சமையல் அறையில் இருக்கும் உணவு பொருட்கள் தான் நம் உடலைப் பாதுகாக்கும் மருந்துகள். அதனால்தான் "உணவே மருந்து"என்று சொல்கிறார்கள் மருத்துவர்கள்.
சத்துக்கள் நிறைந்த பாரம்பரிய உணவுகளான கம்பு, சோளம், கேழ்வரகு, தினை, சாமை, கோதுமை, கைக்குத்தல் அரிசி வகைகளை உணவுக்கு பயன்படுத்துங்கள். சத்துக்கள் நிறைந்த அவரைக்காய், வெண்டைக்காய், கோவைக்காய், பூசணிக்காய், சுண்டைக்காய், கத்தரிக்காய், பரங்கிக்காய், முள்ளங்கி, பீட்ரூட், புடலங்காய், முருங்கைக்காய், கொத்தவரங்காய், கேரட், முட்டைக்கோஸ், பாகற்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு பயன்படுத்துங்கள்.
கீரைகளை உணவில் அதிகம் சேருங்கள். சத்துக்கள் நிறைந்த பழங்களான வாழைப்பழம், கொய்யாப்பழம், திராட்சை, பலாப்பழம், ஆரஞ்சு, பப்பாளி, நாவல் பழம், வெள்ளரி பழம், சாத்துக்குடி, பேரீச்சம் பழம், எலுமிச்சம் பழம், கொடுக்காப்புளி பழம், இலந்தப்பழம், தர்பூசணி பழம் பயன்படுத்துங்கள்.
சத்துக்கள் நிறைந்த தின்பண்டங்களான கடலை மிட்டாய், சர்க்கரை வள்ளி கிழங்கு, பொரிகடலை, அவல், குச்சிக்கிழங்கு, பனங்கிழங்கு, பாசிப்பயறு உருண்டை, ரவா உருண்டை, எள் உருண்டை, இளநீர், பதநீர், நுங்கு, நீர்மோர், சோளக்கதிர், மொச்சை, நரிப்பயிறு, பாசிப்பயிறு, தட்டப்பயிறு, கொள்ளுப்பயிறு போன்றவற்றை பயன்படுத்துங்கள். இதைத்தவிர வேறு எந்த உணவுத் தின்பண்டங்களையும் வாங்கிப் பயன்படுத்த வேண்டாம்.
உலோகப் பாத்திரங்களைப் பயன்படுத்துங்கள். குறிப்பாக செம்பு பாத்திரத்தை அதிகம் பயன்படுத்துங்கள். புற்றுநோய், தைராய்டு நோய், வெண்படை நோய் வராது. இரும்பு சட்டியைப் பயன்படுத்தினால் இரும்புச்சத்து குறைபாடு வராது. இருவேளை சத்தான உணவு எடுத்துக் கொள்ளுங்கள்.
மலக்கட்டு இருக்கக்கூடாது. எண்ணெய் தேய்த்து குளிப்பது, தலைக்கு எண்ணெய் வைப்பது முக்கியம்
மருத்துவர் தின நாளில் மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்றி நோயின்றி, மருந்தின்றி, நலமுடன் நீண்ட ஆயுள் பெற்று மகிழ்ந்து வாழுங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






